காணாமல் போகும் காவிரி நீர்: வறண்டுவரும் கூட்டுக் குடிநீர்த் திட்ட கிணறுகள்!

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக காவிரியில் திறக்கப்படும் 500 கன அடி நீர் நாமக்கல் மாவட்டத்துக்கு வரும்போது வெறும் 50 கன அடியாக குறைந்து விடுகிறது.
பரமத்திவேலூர் பகுதியில் காவிரியில் இருந்து டீசல் மோட்டார்  மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர். 
பரமத்திவேலூர் பகுதியில் காவிரியில் இருந்து டீசல் மோட்டார்  மூலம் உறிஞ்சப்படும் தண்ணீர். 

மேட்டூர் அணையிலிருந்து குடிநீருக்காக காவிரியில் திறக்கப்படும் 500 கன அடி நீர் நாமக்கல் மாவட்டத்துக்கு வரும்போது வெறும் 50 கன அடியாக குறைந்து விடுகிறது. இதனால் நாமக்கல், கரூர், திருச்சி, திருப்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சுமார் 50 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கான கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

50 கன அடியாகக் குறையும் நீர் வரத்து: மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பது கடந்த ஜனவரி மாதம் நிறுத்தப்பட்டது. இருப்பினும், குடிநீர்த் தேவைக்காக தினமும் 500 கன அடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறக்கப்பட்டு வருகிறது. இந்தத் தண்ணீர் தற்போது நாமக்கல் மாவட்ட எல்லையான ஈரோடு அருகே உள்ள வெண்டிபாளையம் தடுப்பணைக்கு வரும்போது 250 கன அடியாகக் குறைந்துள்ளதாகவும், அங்கிருந்து 50 கன அடி அளவு மட்டுமே தண்ணீர் வெளியேறுவதாகவும், இந்தத் தண்ணீரும் பரமத்திவேலூர் அருகே சோழசிராமணி தடுப்பணையோடு நின்று விடுவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
கூட்டுக் குடிநீர்த் திட்டங்களுக்கு பாதிப்பு: நாமக்கல் மாவட்டத்தில் சோழசிராமணி தடுப்பணைக்குகீழ் திருச்சி மாவட்டம், முக்கொம்பு அடுத்த கம்பரசம்பேட்டை வரை சுமார் 80 கி.மீ., தூர இடைவெளியில் சுமார் 50 கூட்டுக் குடிநீர்த் திட்ட கிணறுகள் உள்ளன. 
இந்தத் திட்டங்கள் மூலம்தான் நாமக்கல், கரூர், திருப்பூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கோடையின் தாக்கம் தீவிரமாகியுள்ள நிலையில், ஆற்றில் தண்ணீர் வரத்து முற்றிலுமாக இல்லாததால், ஆற்றில் உள்ள கூட்டுக் குடிநீர்த் திட்ட கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் நீர் மட்டம் குறைந்து, வற்றிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கோடையில் இந்த மாவட்டங்கள் கடும் குடிநீர் பிரச்னையை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. 
தொடரும் தண்ணீர் திருட்டு: இதுகுறித்து பரமத்திவேலூர் ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்கச் செயலர் வி.பெரியசாமி கூறியது:-
மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தியுவுடன், நீரேற்று பாசன சங்கங்கள் மற்றும் ஆற்றங்கரையோரம் பட்டா நிலத்தில் கிணறு தோண்டி தண்ணீர் எடுக்க அனுமதி பெற்றுள்ளவர்களுக்கும் அனுமதி காலாவதியாகிவிடும். 
ஆனால் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 100 நீரேற்று பாசன சங்கங்கள், 300 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்னும் தண்ணீர் எடுத்து வருகின்றனர். இதுபோல், ஆற்றங்கரையில் உள்ள 10 -க்கும் மேற்பட்ட தனியார் ஆலைகள் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை உறிஞ்சி வருகின்றன. 
இதனால்தான் மேட்டூர் அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள போதிலும், சோழசிராமணி தடுப்பணைக்கு வெறும் 50 கன அடி தண்ணீர் மட்டும் வருகிறது. இவ்வாறு முறைகேடாக தண்ணீர் திருட்டில் ஈடுபடும் ஆலைகள், நீரேற்று பாசன சங்கங்கள், விவசாயிகள் மீது பொதுப் பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். 

ஆற்றிலிருந்து 200 மீட்டர் தொலைவில் கிணறு வெட்டி, அந்த ஊற்றில் இருந்துதான் தண்ணீரை எடுத்து பயன்படுத்த வேண்டும் என பொதுப்பணித் துறை வழங்கிய அனுமதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், சில விவசாயிகள் ஆற்றில் இருந்து வாய்க்கால் வெட்டி, கிணறுகளுக்கு தண்ணீர் கொண்டு செல்கின்றனர். சிலர் ஆற்றுக்குள் குழாயைப் போட்டு தண்ணீரை உறிஞ்சுகின்றனர். இந்தத் தண்ணீர் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும், மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும் என பொதுப்பணித் துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. தண்ணீர் திருட்டை தடுக்காவிட்டால், சோழசிராமணிக்கு கீழ் உள்ள கூட்டுக் குடிநீர் திட்ட கிணறுகள் விரைவில் வறண்டு போகும் என்றார் அவர். 

3 மாவட்ட அதிகாரிகளின் கூட்டு முயற்சி தேவை:

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியது:
கடந்த 15 நாள்களில் வெண்டிபாளையம் தடுப்பணைக்கு கீழ் பகுதி முதல் சோழசிராமணி தடுப்பணைக்கு மேல் பகுதி வரை சுமார் 35 இடங்களில் உள்ள நீரேற்று பாசன ஆழ்துளைக் கிணறுகளின் மின் இணைப்பை மின்வாரிய அதிகாரிகளுடன் இணைந்து துண்டித்துள்ளோம். ஈரோடு, சேலம் மாவட்டங்களிலும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்க அந்தந்த மாவட்ட பொதுப்பணித் துறை அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளோம். கடந்த ஆண்டு கரூர் மாவட்டம், மாயனூர் தடுப்பணை வரை சுமார் 100 கன அடி வரை கோடையில் தண்ணீர் சென்றது. அந்த நிலையை உருவாக்க தொடர்ந்து தீவிரமாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகிறோம். 
3 மாவட்ட அலுவலர்களின் கூட்டு முயற்சி என்பதால் சில சிக்கல்கள் உள்ளன. ஆலைகளைப் பொருத்தவரை குடிநீருக்கென ஆண்டு முழுவதும் தண்ணீர் எடுத்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆற்றில் அனுமதிக்கப்பட்ட இடத்தை தவிர வேறு இடங்களில் ஆலைகள் தண்ணீர் எடுக்கின்றனவா? தனி நபர்கள் டீசல் பம்ப்செட் பயன்படுத்தி தண்ணீர் எடுக்கின்றனரா? என்பதையும் ஆய்வு செய்து வருகிறோம் என்றனர் அவர்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com