புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியில் படகு சவாரி தொடக்கம்

புதுச்சேரி அருகேயுள்ள வேல்ராம்பட்டு ஏரியில் படகு சவாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் தொடங்கப்பட்ட படகு சவாரி.
புதுச்சேரி வேல்ராம்பட்டு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை துணைநிலை ஆளுநர் கிரண் பேடியால் தொடங்கப்பட்ட படகு சவாரி.

புதுச்சேரி அருகேயுள்ள வேல்ராம்பட்டு ஏரியில் படகு சவாரி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது.

புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுவையில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று கள ஆய்வுப் பணி மேற்கெண்டு வருகிறார். குறிப்பாக, நீர் பிடிப்புப் பகுதிகளுக்குச் சென்று அதை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கெண்டு வருகிறார்.

தொடர் ஆய்வின் மூலம் கனகன் ஏரியை மேம்படுத்தி அங்கு படகு சவாரியை தொடக்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக வேல்ராம்பட்டு ஏரியிலும் பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக ஏரியில் தற்போது நீர் தேங்கி நிற்கிறது.

ஆளுநர் கிரண் பேடி தனது 146-ஆவது கள ஆய்வுப் பணியை வேல்ராம்பட்டு ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மேற்கொண்டார்.

அவருடன் வனத் துறை அதிகாரி குமார், மீன்வளத் துறை இயக்குநர் வின்சென்ட் ராயர், வேளாண் துறை இயக்குநர் ராமமூர்த்தி, புதுச்சேரி நகராட்சி ஆணையர் கணேசன், சுற்றுலாத் துறை இயக்குநர் முனுசாமி, உள்ளாட்சித் துறை இயக்குநர் மன்சூர், பொதுப் பணித் துறை நிர்வாகப் பொறியாளர் தாமரை புகழேந்தி, உள்ளாட்சித் துறை கண்காணிப்புப் பொறியாளர் அறிவழகன், காவல் துறை முதுநிலை எஸ்.பி. அபூர்வ குப்தா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

இந்த ஆய்வின்போது, ஆளுநர் கிரண் பேடி வேல்ராம்பட்டு ஏரியில் முதல் முறையாக படகு சவாரியை தொடக்கிவைத்தார்.

பின்னர், அதிகாரிகள், பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

இந்த ஏரியின் உருமாற்றத்துக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏரியில் இருந்து நீர் வெளியேற்றப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கழிவுநீரை கலக்க விடக்கூடாது.

ஏரியில் படகு சவாரி நடத்துவதுடன், ஏரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீன் பிடிக்கவும், அந்த மீனை ஏரிக்கரையிலேயே சமைத்து சாப்பிடுவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சமைத்துத் தரும் பணியை சுய உதவிக் குழுக்களிடம் ஒப்படைக்கலாம்.

நகராட்சி நிர்வாகம் இங்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். ஏரியைப் பாதுகாக்க கட்செவி அஞ்சல் குழு ஒன்றையும் ஏற்படுத்த வேண்டும். மேலும், ஆண் தன்னார்வலர்களும் ஏரியை பாதுகாக்க முன்வர வேண்டும்.

பொதுப் பணித் துறை மூலம் வேல்ராம்பட்டு ஏரியைப் பாதுகாக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படும் என்றார் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com