எதிர்க்கட்சிகளிடம் பாகுபாடு காட்டவில்லை: திமுக புகாருக்கு பேரவைத் தலைவர் விளக்கம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிப்பது உள்பட அனைத்து விஷயத்திலும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தவிதப் பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை
எதிர்க்கட்சிகளிடம் பாகுபாடு காட்டவில்லை: திமுக புகாருக்கு பேரவைத் தலைவர் விளக்கம்

எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு அளிப்பது உள்பட அனைத்து விஷயத்திலும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என எந்தவிதப் பாகுபாடுகளும் காட்டப்படுவதில்லை என்று பேரவைத் தலைவர் பி.தனபால் விளக்கம் அளித்தார்.
சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் திங்கள்கிழமை தொடங்குவதற்கு முன்பாக, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்னை ஒன்றைக் கிளப்பினார். விவாதத்தில் பேசுவதற்கு அதிமுக உறுப்பினர்கள் 3 பேருக்கும், திமுக உறுப்பினர்கள் 2 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சட்டப் பேரவையில் அமைச்சர்களைத் தவிர்த்துப் பார்த்தால் அதிமுகவுக்கு 77 உறுப்பினர்களும், திமுகவுக்கு 89 உறுப்பினர்களும் உள்ளனர். ஏற்கெனவே ஆளுநர் உரையின் மீது நடந்த விவாதத்தை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது.
அப்போது, திமுக, அதிமுக உறுப்பினர்கள் இருவருக்கும் பேசுவதற்கான வாய்ப்பு சம அளவிலேயே இருக்க வேண்டுமென முடிவு செய்யப்பட்டது. ஆனால், இப்போது நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் மாற்றம் செய்திருப்பதை ஏற்க முடியாது என்றார்.
பேரவைத் தலைவர் பி.தனபால்: அமைச்சர்களின் எண்ணிக்கையைக் கழித்து பேரவையில் உறுப்பினர்களைக் கணக்கிட முடியாது. அமைச்சர்களும் பேரவையின் உறுப்பினர்கள்தான். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது, திமுகவினர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் பேசுவதற்கான வாய்ப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டது.
எதிர்க்கட்சியினரே அதிக நேரம்...ஆனால், இப்போது அதே முறையைப் பின்பற்றுவது இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக பேரவையில் நடந்த விவாதங்களைப் பார்த்தால், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரே அதிக நேரம் பேசியுள்ளனர். ஆளும்கட்சி தரப்பில் 45 நிமிஷங்கள் வரை பேசினால், எதிர்க்கட்சியினர் 90 நிமிஷங்களுக்கும் மேலாகப் பேசியுள்ளனர். உறுப்பினர்கள் பேசக்கூடிய நேரம்தான் முக்கியமே தவிர எண்ணிக்கை அல்ல. ஆளும்கட்சி என்ற வகையில் அதற்கான அந்தஸ்தும் வழங்கப்பட வேண்டும்.
நோக்கம் எதுவுமில்லை: எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது, அதற்கான விளக்கத்தை அமைச்சர்களும் தர வேண்டியுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு நேரத்தைத் தரக்கூடாது என்பது நோக்கமல்ல. பேரவையைப் பொருத்தவரை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சமஅளவிலேயே பாவிக்கப்படுகிறது. அவையில் அனைவரும் சமமான உறுப்பினர்கள்தான். அவர்கள் (அதிமுக) ஆளும்கட்சியில் இருக்கிறார்கள். நீங்கள் (திமுக) எதிர்க்கட்சியில் இருக்கிறீர்கள். அவ்வளவுதான். மற்றபடி அனைத்து உறுப்பினர்களுக்கும் சமமான மரியாதை தரப்படுகிறது. எனவே, பேரவையை நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்புத் தர வேண்டும். அனைத்து உறுப்பினர்களுக்கான உரிமைகளையும் பாதுகாப்பேன் என்றார் பேரவைத் தலைவர் தனபால்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com