காசநோய் சிகிச்சைக்காக தமிழகத்துக்கு ரூ.100 கோடி?

தமிழகத்தில் உள்ள காசநோயாளிகளின் சிகிச்சைக்காக மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
காசநோயின் தாக்கத்தைப் பரிசோதிக்கும் ஜீன் எக்ஸ்பர்ட் பரிசோதனை.
காசநோயின் தாக்கத்தைப் பரிசோதிக்கும் ஜீன் எக்ஸ்பர்ட் பரிசோதனை.

தமிழகத்தில் உள்ள காசநோயாளிகளின் சிகிச்சைக்காக மத்திய அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
முதல் ஆறுமாத கால சிகிச்சையில் குணமாகாத காசநோயாளிகளுக்கு 'ஜீன் எக்ஸ்பர்ட்' என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த சிகிச்சையானது சளியில் உள்ள கிருமித்தொற்றை ஆய்வு செய்து, அது நோயாளிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மருந்துகளுக்கு கட்டுப்படும் வகையில் உள்ளதா என்பதைக் கண்டறிய உதவுகிறது. 
பரிசோதனை முடிவில் நோயின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டால், அடுத்தகட்ட சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ரூ.25,000 மதிப்புள்ள மாத்திரைகள்: இத்தகைய தீவிர காசநோயாளிகளுக்கு மத்திய அரசின் சார்பில் 'பெடாகுயிலின்' என்ற மாத்திரைகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இந்தத் திட்டத்தின்கீழ் விலை அதிகமுள்ள இந்த மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அதாவது ஒரு நபருக்கு ரூ.25,000 மதிப்புள்ள மாத்திரைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
எனினும் காசநோயாளிகளின் எண்ணிக்கை பல்வேறு காரணங்களால் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு மருத்துவமனைகளில் 80 ஆயிரம் பேர், தனியார் மருத்துவமனைகளில் 70 ஆயிரம் பேர் என, தமிழகத்தில் ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் காசநோய்க்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், காசநோய் கண்டறியப்படாத நிலையில் கணிசமான எண்ணிக்கையில் நோயாளிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, புதிய காசநோயாளிகளைக் கண்டறியும் பணிகளிலும் சுகாதாரத் துறைப் பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், காசநோயாளிகளுக்கு இலவச மாத்திரைகளை வழங்குவதற்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, 'மத்திய அரசு திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு மட்டும் இலவசமாக மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவற்றை வழங்குவதற்காக மத்திய அரசு 2017 -18 -ஆம் நிதியாண்டில் ரூ.72 கோடி நிதி ஒதுக்கியது. 
இந்நிலையில், காநோயாளிகளுக்கு மாதந்தோறும் ரூ.500 நிதியுதவி அளிக்கப்படும் என்று மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. 
அதிகரிக்கும் காசநோயாளிகளின் எண்ணிக்கை, புதிய திட்டங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு 2018 - 19 -ஆம் நிதியாண்டில் தமிழகத்துக்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது' என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com