சிறுமியின் வயிற்றிலிருந்து 2 கிலோ தலைமுடி கட்டி அகற்றம்: வேலூர் அரசு மருத்துவர்கள் சாதனை

அரிதான வகையில் சிறுமியின் இரைப்பையிலிருந்து சிறுகுடல் வரை நீண்டிருந்த 2 கிலோ எடையுள்ள தலைமுடிக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி
சிறுமியின் வயிற்றிலிருந்து 2 கிலோ தலைமுடி கட்டி அகற்றம்: வேலூர் அரசு மருத்துவர்கள் சாதனை

அரிதான வகையில் சிறுமியின் இரைப்பையிலிருந்து சிறுகுடல் வரை நீண்டிருந்த 2 கிலோ எடையுள்ள தலைமுடிக் கட்டியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 
வேலூர் மாவட்டம், ஆற்காடு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி அய்யப்பன்- அமுதா தம்பதியின் 7 வயது மகள் ஜனனி. இவர், தொடர்ந்து ஓராண்டு காலமாக கடுமையான வயிற்றுவலி, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளால் அவதிப்பட்டு வந்தார். பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமாகாத நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு ஜனனிக்கு சி.டி.ஸ்கேன், குடல் உள்நோக்கி (என்டோஸ்கோபி) ஆகிய பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், அவரது இரைப்பையில் தொடங்கி, சிறுகுடல் வரை தலை முடியிலான முடிச்சு பந்துக் கட்டி இருப்பது தெரியவந்தது. தவிர, அந்த கட்டி சுமார் 2 கிலோ எடையளவில் இருந்ததால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதையடுத்து, அரசு மருத்துவக் கல்லூரியின் பொது அறுவை சிகிச்சை துறைத் தலைமை மருத்துவர் லோகநாதன், பிரிவு 3-இன் தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்த், உதவி குழந்தைகள் நல அறுவை சிகிச்சை மருத்துவர் கோபிநாத், மருத்துவர்கள் சதீஷ்குமார், அச்சுதன், மயக்க மருத்துவர் கோமதி, பாலமுருகன், ராஜன் மனநலப் பிரிவு மருத்துவர் பிரபாகர ராஜ் ஆகியோர் இணைந்து அறுவை சிகிச்சை செய்து, அந்த கட்டியை அகற்றினர். இதையடுத்து, ஜனனியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 
இந்த அறுவை சிகிச்சை குறித்து மருத்துவர் ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இவ்வாறான கட்டி இரைப்பை முதல் சிறுகுடல் வரை பரவியிருப்பதை ராபுன்சல் நோய் என அழைக்கப்படுகிறது. மன அழுத்தத்தினால் தனது தலைமுடியை தானே பிடுங்கி தொடர்ச்சியாக உண்பதால் இந்த கட்டி ஏற்படுகிறது. உலகளவில் இதுவரை சுமார் 50 நோயாளிகளுக்கே இந்த வகை கட்டி இருப்பது கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டிருப்பதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இதன்படி, அரிதான வகையில் ஜனனியின் இரைப்பை முதல் சிறுகுடல் வரை பரவியிருந்த 2 கிலோ தலைமுடி கட்டி மிகுந்த கவனமுடன் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப் பட்டுள்ளது. 
தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்திருந்தால் ரூ. 1.50 லட்சத்துக்கு மேல் செலவாகியிருக்கக்கூடும். ஆனால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மூலம் முற்றிலும் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த அறுவை சிகிச்சையை சிறப்பாக மேற்கொண்ட மருத்துவர் குழுவுக்கு கல்லூரி முதல்வர் சாந்திமலர் பாராட்டு தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com