தேனி அருகே தனியார் பள்ளியில் பிளஸ் 2 விடைத்தாள் வாகனம், பறக்கும் படை குழு சிறைபிடிப்பு

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வு மையத்தில் திங்கள்கிழமை, பொதுத் தேர்வு விடைத்தாள் கொண்டு செல்லும்
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வு மையத்தில் திங்கள்கிழமை விடைத்தாள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வு மையத்தில் திங்கள்கிழமை விடைத்தாள் வாகனத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள்.

தேனி அருகே முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி பொதுத் தேர்வு மையத்தில் திங்கள்கிழமை, பொதுத் தேர்வு விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனம் மற்றும் தேர்வு கண்காணிப்பு பறக்கும் படை குழுவினரை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் பிளஸ் 2 இயற்பியல், பொருளியல் ஆகிய பாடங்களில் பொதுத் தேர்வு நடைபெற்றது. இதில், தேனி மேலப்பேட்டை இந்து நாடர் உறவின்முறை மெட்ரிக் பள்ளி மற்றும் வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மொத்தம் 538 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்தல் கண்காணிப்பு அலுவலரும் மதுரை பள்ளிக் கல்வித் துறை துணை இயக்குநருமான ஆசீர்வாதம் தலைமையில் 3 பறக்கும் படை குழுவினர் தேர்வு மையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இயற்பியல் பாடத் தேர்வு நடைபெறும் தேர்வறைகளில் பறக்கும் படை குழுவினர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த மாணவர்களிடம் கெடுபிடி காட்டியதாக கூறப்படுகிறது.
இதை கண்டித்து, தேர்வு முடிந்த பின்பு பள்ளி வளாகத்திற்குள் விடைத்தாள் கொண்டு செல்லும் வாகனம் மற்றும் தேர்வு கண்காணிப்பு பறக்கும் படை குழுவினரை சிறைபிடித்து மாணவர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதில், இயற்பியல் தேர்வு நடைபெற்ற தேர்வறைகளில் பறக்கும் படைக் குழுவினர், தங்களை வினாத்தாளின் ஒவ்வொரு பக்கத்திலும் தேர்வு பதிவு எண்ணை எழுதுமாறும், வினாத்தாளில் குறிப்பிட்டுள்ள வரிசையின்படி விடை எழுத வேண்டும் என்றும், சட்டைக் காலர் மடிப்பை சோதனையிட்டும் கெடுபிடி காட்டியதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். 
பறக்கும் படை குழுவின் கெடுபிடியால் தங்களது தேர்வு நேரம் வீணாகியதால், தங்களுக்கு மறு தேர்வு நடத்த வேண்டும் அல்லது போனஸ் மதிப்பெண் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாணவர்களின் போராட்டத்தால் தேர்வு முடிந்த பின்பும் தேர்வறை கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை குழுவினர் மாலை 5 மணி வரை பள்ளி வளாகத்தை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தகவலறிந்து பள்ளிக்கு வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வசந்தி மற்றும் தேர்வு கண்காணிப்பு பணியில் இருந்த பள்ளிக் கல்வித் துறை இயக்குநரின் உதவியாளர் சுரேஷ் ராஜா ஆகியோர், தேர்வு கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேர்வறை கண்காணிப்பாளர்களிடம் விசாரணை நடத்தினர். 
இதற்கிடையே, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அளித்த தகவலின்படி பள்ளி வளாகத்திற்கு வந்த வீரபாண்டி காவல் நிலைய போலீஸார், விடைத்தாள் வாகனத்தை மீட்டு பள்ளியில் இருந்து விடைத்தாள் கட்டு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இயற்பியல் தேர்வில் விடைத்தாளில் ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு இடைவெளி ஒதுக்கி வைத்து, வேறு வினாக்களுக்கு விடை எழுதியதால், வினாத்தாளில் உள்ள தெரிந்த வினாக்களை வரிசைப்படுத்தி விடையெழுதுமாறு மாணவர்களிடம் கூறியதாக பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் கூறினர்.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியது:
இந்த சம்பவம் குறித்து மாணவர்கள், பறக்கும் படை மற்றும் தேர்வறை கண்காணிப்பு அலுவலர்களிடம் விசாரணை நடத்தி பள்ளிக் கல்வித் துறை தேர்வுகள் இயக்ககத்திற்கு அறிக்கை அளிக்கப்படும். மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை மெட்ரிக் பள்ளி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய வீரபாண்டி அரசு பள்ளி மாணவர்கள் இது போன்று புகார் எதும் கூறவில்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com