பாரம்பரிய சிற்பிகளின் கைவண்ணத்தில் புதுப்பொலிவு பெறுகிறது வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் பாரம்பரிய சிற்பிகளின் கைவண்ணத்தில் மீண்டும் புதுப்பொலிவு பெறவுள்ளது.
தீ விபத்தில் சேதமடைந்த அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வீரவசந்தராயர் மண்டபம்
தீ விபத்தில் சேதமடைந்த அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் வீரவசந்தராயர் மண்டபம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் தீ விபத்தால் சேதமடைந்துள்ள வீரவசந்தராயர் மண்டபம் பாரம்பரிய சிற்பிகளின் கைவண்ணத்தில் மீண்டும் புதுப்பொலிவு பெறவுள்ளது.
இக்கோயிலின் கோபுரங்களில் மிகப்பழமையான கிழக்கு ராஜகோபுரத்தை ஒட்டி உள்புறமாக அமைந்துள்ளதே வீரவசந்தராயர் மண்டபம். ஆயிரங்கால் மண்டபத்தின் தெற்குப் பகுதியில் உள்ள இந்த மண்டபம் கி.பி. 1611ஆம் ஆண்டு திருமலை நாயக்கரின் மகனான முத்து வீரப்பநாயக்கரால் கட்டப்பட்டுள்ளது. சுமார் 7,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மண்டபத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பொம்மை, பூஜைப் பொருள்கள் விற்கும் கடைகள் அமைக்கப்பட்டிருந்தன. 
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 2-ம் தேதி இரவு திடீரென வீரவசந்தராயர் மண்டபத்தின் உள்பகுதியில் தீப்பற்றியதில், அங்கிருந்த 20 கடைகள் எரிந்ததுடன், மண்டபத்தின் 19 தூண்கள் மற்றும் மேற்கூரைப் பகுதிகள் பெரும் சேதமடைந்தன. இதையடுத்து, சேதமடைந்த மண்டபத்தை சீரமைக்க பொதுப்பணித் துறை முன்னாள் முதன்மை பொறியாளர், சிற்பிகள், கோயில் தக்கார், இணை ஆணையர், ஸ்தபதி என 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் இரு முறை கூடி ஆலோசித்த நிலையில், சீரமைப்புப் பணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டன.
முதல் கட்டமாக இம்மண்டபத்தின் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதி தூண்கள், மேற்கூரைக் கற்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே பழமை மாறாமல் மண்டபத்தை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் அங்கு பயன்படுத்தப்பட்ட கற்கள் எந்த வகையைச் சேர்ந்தவை என தரம் கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம், நாமக்கல், ராசிபுரம் மற்றும் கேரள மாநிலம் மயிலாடி ஆகிய இடங்களில் உள்ள கற்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் பரிசோதனைக்கும் உள்படுத்தப்பட்டுள்ளன.
கற்கள் சோதனை முடிந்து இந்தியத் தொழில்நுட்பக் கழகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்படும் நிலையில், மண்டப சிற்ப சிலைகள், யாழிகள் ஆகியவற்றை வடிவமைக்க சிற்பிகளைத் தேர்வு செய்யவும் முடிவாகியுள்ளது. இயந்திரங்கள் ஏதுமின்றி முழுக்க முழுக்க கைச் சிற்பங்களாலேயே மண்டபத் தூண்களும், அவற்றின் இணைப்புகளும் அமைக்கப்படவுள்ளன. வீரவசந்தராயர் மண்டபத்தின் தூண்களை பாரம்பரியத்தில் வந்த சிற்பிகளைக் கொண்டு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கும்பகோணம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சிற்பிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
மண்டப சீரமைப்புப் பணிகள் குறித்து சிறப்புக்குழு உறுப்பினரும், மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் இணை ஆணையருமான என். நடராஜன் கூறியது, மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கை தேர்ந்த சிற்பிகள் மூலம் மண்டப சீரமைப்புப் பணிகள் நடக்கும் என்றார். 
மதுரை மீனாட்சிசுந்தரேசுவரர் கோயில் தீ விபத்து நிகழ்ந்த வீர வசந்தராயர் மண்டபத்தை சீரமைக்கும் வகையில் 12 பேர் கொண்ட சிறப்புக் குழுவின் மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் வீரவசந்தராயர் மண்டபத்தின் சீரமைப்பு தொடக்கம் குறித்து இறுதி செய்யப்பட்டு பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com