பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலம் தமிழகம்: திமுக புகாருக்கு முதல்வர் பதில்

சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக திமுக - அதிமுகவினரிடேயே பேரவையில் திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக திமுக - அதிமுகவினரிடேயே பேரவையில் திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசும்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று குற்றஞ்சாட்டினார்.
அப்போது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறுக்கிட்டு, அரசைக் குற்றம்சாட்டி பேசும்போது, ஆதாரத்தை அளித்துப் பேச வேண்டும். பொத்தாம் பொதுவாகப் பேசக்கூடாது என்றார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு மிக சிறப்பாகப் பராமரிக்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, அகில இந்திய அளவில் உள்ள பெரிய மாநிலங்களில் பெண்கள் பாதுகாப்பாக வாழ உகந்த முதல் மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.
இந்தியாவியேலே பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான பெரு நகரங்களில் கோயம்புத்தூர் முதலாவதாகவும், மெட்ரோ நகரங்களில் சென்னை மாநகரம் முதலாவதாகவும் உள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான மொத்த குற்றங்களில் தமிழகத்தின் குற்ற விகிதம் 10.7 சதவீதம் ஆகும். இதனை தேசிய சராசரியான 51.4 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 40.7 புள்ளிகள் குறைவாக உள்ளன.
இந்திய தர நிர்ணயக் குழு 80 பல்வேறு விதமான காரணிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் அளித்து இந்தியாவில் உள்ள 15,000-த்துக்கும் மேற்பட்ட காவல்நிலையங்களில் மிகச் சிறந்த 10 காவல் நிலையங்களைத் தேர்ந்தெடுத்தது. அதில் இந்தியாவிலேயே கோவை மாநகரில் உள்ள ஆர்.எஸ்.புரம் காவல் நிலையம் முதல் காவல் நிலையமாகவும், சென்னை அண்ணா நகரில் உள்ள காவல் நிலையம் 5-ஆவது காவல் நிலையமாகவும் தேர்வு செய்யப்பட்டு, விருதுகள் பெற்றுள்ளன.
நாட்டிலேயே அதிக காவல் நிலையங்களைக் கொண்ட மாநிலம் தமிழகம். 1,832 காவல் நிலையங்களைக் கொண்டு முதலாவது இடத்தில் விளங்குகிறது. மக்கள் தொகையிலும், பரப்பிலும் தமிழகத்தைவிட அதிகமுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தில் 1,525 காவல் நிலையங்களைக் கொண்டு இரண்டாம் இடத்தில் உள்ளது என்றார் முதல்வர்.
அதன் பிறகு கடைகளில் போதைப் பாக்குகள் விற்பது தொடர்பாக திமுக உறுப்பினர் ப.ரங்கநாதன் பேசினார். அதனைப் பேரவைத் தலைவர் அவைக் குறிப்பிலிருந்து நீக்கினார். 
துரைமுருகன்: கடந்த முறையில் ஆதாரத்துடன் வந்துபோதுதான் எங்களை பேரவையிலிருந்து வெளியேற்றினீர்கள். 
பேரவைத் தலைவர்: இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.
மு.க.ஸ்டாலின்: கடந்த முறை எந்தெந்தக் கடைகளில் விற்கப்படுகிறது என்பதையெல்லாம் ஆதாரத்துடன்தான் கூறினேன். இப்போதும்கூட காவல்துறையினரால் குட்கா போன்றவை பறிமுதல் செய்யப்படும் செய்திகள் தொடர்ந்து வருகின்றன. எனவே, குட்கா போன்ற பொருள்கள் தொடர்ந்து விற்கப்படுகின்றன. அதைத்தான் உறுப்பினர் ரங்கநாதன் குறிப்பிடுகிறார். அதை அவைக்குறிப்பிலிருந்து நீக்குவது மரபாகாது. சட்டம்-ஒழுங்கு எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் குறிக்கவே இது தொடர்பாகப் பேசுகிறோம் என்றார்.
பல்கலைக்கழக பதிவாளர்கள் பிரச்னை: அதைத் தொடர்ந்து உறுப்பினர் ரங்கநாதன் பேசும்போது, பல்கலைக்கழகப் பதிவாளர்கள் தொடர்ந்து தற்கொலை செய்துகொள்வதைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்கு அமைச்சர் தங்கமணி எழுந்து, சேலத்தில் திமுக பிரமுகர் ஒருவரால் நடைபெற்ற கொலையைக் குறிப்பிட்டுப் பேசியதுடன், கொலையாளியை திமுகவின் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் சிறைக்கு நேரில் சென்று பார்த்ததாகவும் குறிப்பிட்டார். இதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மு.க.ஸ்டாலின்: அமைச்சர் தங்கமணி எப்போதும் நிதானமாக பேசக்கூடியவர். ஆனால், இன்றைக்கு இந்த அவையில் தேவையற்ற ஒரு சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறார். காவல் துறையில் சட்டம் - ஒழுங்கு குறித்து அவர் பதில் சொல்லட்டும். அது தவறென்று வாதிட நான் தயாராக இல்லை. ஆனால், சேலத்தில் நடந்த ஒரு கொலையை சொல்லி, அதைச் செய்தது பாப்பாரப்பட்டி சுரேஷ் என்று சொல்லி அதைப் பதிவு செய்திருக்கிறார்.
அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது உண்மை. ஆனால், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லையென்று உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. அதை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்து, உச்ச நீதிமன்றத்திலும் அவர் குற்றவாளியில்லை என்று தீர்ப்பு வந்துள்ளது. வீரபாண்டி ஆறுமுகம் சிறைக்குச் சென்று பார்த்ததாகச் சொல்கிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் சென்று பார்க்கவில்லையா?
அமைச்சர் பி.தங்கமணி: எதிர்க்கட்சித் தலைவர்களை புண்படுத்துவதற்காக நான் அப்படிக் கூறவில்லை. ஜெயலலிதாவைச் சிறையில் சென்று பார்த்ததாகக் கூறுகிறீர்கள். அதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள். ஜெயலலிதாவுக்கு வரவேற்பு மட்டுமே கொடுத்தோம். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. 

பேரவையில் இன்று...
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (மார்ச்20) கேள்வி நேரம் நடைபெறும். இதன்பிறகு, நேரமில்லாத நேரத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல முக்கிய பிரச்னைகளுக்கு முதல்வர், அமைச்சர்கள் பதில் அளிக்கவுள்ளனர். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதம் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து நடைபெறவுள்ளது. இதில், அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்றுப் பேசவுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com