காங்கிரஸ் கட்சியினர் பொறுமையானவர்கள், நல்லவர்கள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

திமுக எழுந்திருக்கும் போது, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் எழுந்திருக்க வேண்டாமென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.
காங்கிரஸ் கட்சியினர் பொறுமையானவர்கள், நல்லவர்கள்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

திமுக எழுந்திருக்கும் போது, காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களும் எழுந்திருக்க வேண்டாமென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுரை வழங்கினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பொறுமையானவர்கள், நல்லவர்கள் எனவும் அவர் பேசினார்.
தமிழகத்தில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக, சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை விவாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து, பேரவையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இப்பிரச்னையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கருத்துகளைத் தெரிவிக்கும் முன்பாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியது:
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டி சட்டத்தின்படி ஆட்சி நடத்த வேண்டுமென்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எண்ணினார். அதன்படியே, இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதைப் பொறுக்க முடியாமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஏதாவது ஒரு பிரச்னையை எழுப்பி மக்களைத் திசை திருப்பி தமிழகத்தில் அரசியல் லாபம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறார்.
ரத யாத்திரை ஊர்வலம், ஐந்து மாநிலங்கள் வழியாக தமிழகத்தை வந்தடைகின்ற ஒரு சூழ்நிலை உள்ளது. அதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநில அரசுகளும் அனுமதி கொடுத்துள்ளன. காங்கிரஸ் ஆளுகின்ற கர்நாடக மாநிலத்திலும், கம்யூனிஸ்ட் ஆளும் மாநிலங்களில்கூட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. 
அந்த மாநிலங்களில் எல்லாம் ஊர்வலம் அமைதியாக நடைபெற்றுள்ளது. இங்கே காங்கிரஸ் கட்சியினரும், திமுகவினருடன் சேர்ந்து கோஷம் போடும் ஒரு சூழலை ஏற்படுத்துவது காங்கிரஸ் கட்சிக்கு உகந்ததுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.
தடுத்து நிறுத்தும்: ரத யாத்திரையின் போது, மதக் கலவரத்தைத் தூண்டுகின்ற வார்த்தைகளோ, இங்கே வாழுகின்ற மக்களைப் பிரித்தாளும் சூழ்நிலையை ஏற்படுத்துகின்ற வார்த்தைகளோ இருந்தால், தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்தும்.
எனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் தீர யோசனை செய்து, நல்ல முடிவை எடுக்க வேண்டும். எதற்கெடுத்தாலும் திமுக எழுந்திருக்கும்போது, காங்கிரஸ் கட்சியினரும் எழுந்திருக்கும் சூழ்நிலையை தமிழக சட்டப் பேரவைக்குள் கைவிட வேண்டும்.
காங்கிரஸ் கட்சிக்கென்று மிகப் பெரிய பாரம்பரியம் இருக்கிறது. வழி இருக்கிறது. கொள்கை, கோட்பாடுகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சட்டப் பேரவை நடவடிக்கைகள் மூலம் காற்றில் பறக்கவிட்டு விடக் கூடாது. நீங்கள் அனைவரும் பொறுமையானவர்கள். நல்லவர்கள் என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com