நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் 12-ஆவது நாளாக அமளி

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் 12-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, நாடாளுமன்ற வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக எம்பிக்கள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் 12-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தமிழக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழக எம்பிக்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்நிலையில், இக்கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை காலை நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலையின் முன் அதிமுக உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் அதிமுக, தெலுங்கு தேசம், டிஆர்எஸ் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். 
அதிமுக உறுப்பினர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி குரல் எழுப்பினர். அமளி காரணமாக அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 
பின்னர், அவை மீண்டும் கூடியதும், அதிமுக குழுத் தலைவர் பி.வேணுகோபால் காவிரி விவகாரம் குறித்து தனது இருக்கையில் இருந்தவாறு குரல் எழுப்பினார். அப்போது அக்கட்சியின் உறுப்பினர்கள் ஏராளமானோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து, தங்கள் கட்சியின் தலைவர்கள் உருவம் பொறித்த படங்களுடன் மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரும் வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு அமளியில் ஈடுபட்டனர். 
அவர்களில் பலர் தோளில் கட்சிக் கரை துண்டும், சட்டைப் பையில் கறுப்புப் துணிப் பட்டையும் அணிந்திருந்தனர். டிஆர்எஸ் உறுப்பினர்கள் இடஒதுக்கீடு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி குரல் எழுப்பினர்.
இதனிடையே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இராக் மொசுல் நகரில் ஐஎஸ்எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட இந்தியர்கள் 39 பேர் உயிரிழந்தது, அவர்களது உடல்கள் மீட்கப்பட்டது ஆகியவை தொடர்பான தகவலை அவையில் தெரிவிக்க மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் முயன்றார். அப்போது, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வேறு விவகாரங்களை விவாதிக்கக் கோரி அவைத் தலைவர் சுமித்ரா மகாஜனை வலியுறுத்தினர். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பேசுவதற்கு இடையூறு ஏற்படுத்தாமல் அனைவரும் அமைதிகாக்குமாறு சுமித்ரா மகாஜன் கேட்டுக் கொண்டார். 
அப்போது, அதிமுக உறுப்பினர்கள் அவையின் மையப் பகுதியில் இருந்தாலும் அமைதியாக நின்றிருந்தனர். ஆனால், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சியினர் தொடர்ந்து வேறு விவகாரங்களை எழுப்பியவாறு இருந்தனர். அப்போது, தனது கவலையை சுமித்ரா மகாஜன் வெளியிட்டார். இந்த அமளிக்கிடையை அமைச்சர்கள் சிலர் பல்வேறு நிலைக் குழு தொடர்பான பரிந்துரை அமலாக்க நிலவர அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.
அப்போது, தெலுங்குதேசம் உறுப்பினர் தோட்டா நரசிம்மன், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் வி.ஒய். சுப்பா ரெட்டி ஆகியோர் அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் நோட்டீஸ் அளித்திருப்பது குறித்து சுமித்ரா மகாஜன் தெரிவித்தார். 
மேலும், "உறுப்பினர்களின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரும் நோட்டீûஸ அவையின் முன் கொண்டு வருவது எனது கடைமை. அவையில் அமளி நீடித்தால், எழுந்து நிற்கும் 50 உறுப்பினர்களை எண்ண முடியாது. இதனால், உறுப்பினர்கள் அவரவர் இருக்கைக்கு சென்று அமருங்கள்' என்றும் கேட்டுக் கொண்டார். ஆனால், அவையில் கூச்சல், குழப்பம் தொடர்ந்து நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்..: மாநிலங்களவை செவ்வாய்க்கிழமை காலை அதன் தலைவர் எம். வெங்கய்ய நாயுடு தலைமையில் கூடிய சிறிது நேரத்தில் இராக்கில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு உயிரிழந்த 39 இந்தியர்கள் குறித்த தகவல் விவரங்களை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவாக எடுத்துரைத்தார். 
இதையடுத்து, இறந்தவர்களுக்கு இரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் விஜிலா சத்யானந்த், எஸ்.முத்துக்கருப்பன், எஸ்.ஆர். பாலசுப்ரமணியன், ஏ.விஜயகுமார் உள்ளிட்டோர் அவையின் மையப் பகுதிக்கு வந்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தை எழுப்பினர். 
திமுக உறுப்பினர்கள் குழுத் தலைவர் கனிமொழி, அக்கட்சியின் உறுப்பினர்கள் திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா ஆகியோர் இருக்கையில் எழுந்து நின்று கோரிக்கையை வலியுறுத்தினர். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே மக்களவைத் துணைத் தலைவர் எம்.தம்பிதுரை கூறுகையில், "அதிமுகவின் ஒரே நோக்கம் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் வரை நாடாளுமன்றத்தில் போராடுவதுதான். தமிழக மக்களின்உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இப்போராட்டத்தை அதிமுக தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com