அமைதி, வளம், வளர்ச்சி எங்கே?: முதல்வருடன் துரைமுருகன் காரசார விவாதம்

தமிழக அரசின் குறிக்கோளாகச் சொல்லப்படும் அமைதி, வளம், வளர்ச்சி தமிழகத்தில் இருக்கிறதா என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன்

தமிழக அரசின் குறிக்கோளாகச் சொல்லப்படும் அமைதி, வளம், வளர்ச்சி தமிழகத்தில் இருக்கிறதா என்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் காரசார விவாதம் நடத்தினார்.
 சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:
 கடந்த 2011 -ஆம் ஆண்டிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து வருகிறார். அவர் தர்மயுத்தம் நடத்திய காலத்தில் மட்டும் ஜெயக்குமார் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
 தற்போது மீண்டும் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்; மகிழ்ச்சி.
 நிதிநிலை அறிக்கையின் குறிக்கோள் அமைதி, வளம், வளர்ச்சி என்று கூறியுள்ளீர்கள். அமைதி எங்கே இருக்கிறது? ரெளடிகள் கேக் வெட்டிக் கொண்டாடும் நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அதிலும் கேக்கை எதில் வெட்டுகிறான்?. கத்தியை வைத்து வெட்டுகிறான் என்றார்.
 அப்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறுக்கிட்டு கூறியது: ரெளடிகள் ஒரே நாளில் உருவாவது இல்லை. பல ஆண்டுகளாக திருட்டுகள், கொலை வழக்குகளில் ஈடுபட்டவர்கள்தான் ரெளடிகள். திமுக ஆட்சியிலும் இருந்தவர்கள்தான், இப்போது தொடர்ந்து இருந்து வருகின்றனர். நாங்கள் அவர்களைக் கண்டுபிடித்திருக்கிறோம். நீங்கள் அவர்களைக் கண்டுபிடிக்கவில்லை என்றார்.
 துரைமுருகன்: ரெளடிகள் இருந்தார்கள். ஆனால், ரெளடிகள் கேக் வெட்டிக் கொண்டாடுவது இந்தக் காலத்தில்தான்.
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி: ரெளடிகளை நீங்கள் கண்டுபிடிக்கத் தவறிவிட்டீர்கள். நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். தமிழகத்தில் உள்ள ரெளடிகள் எல்லாம் வெளிமாநிலத்துக்கு தப்பிச் செல்லக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எல்லா மாநிலத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அதைச் சரியாகக் கட்டுப்படுத்துகிறோமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு பேணிக் காக்கப்பட்டு, தமிழகம் அமைதிப் பூங்காவாகத் திகழ்கிறது. தமிழகத்தில் குற்றங்கள் குறைந்திருக்கின்றன.
 துரைமுருகன்: ரெளடிகளைக் கண்டுபிடிக்கிறீர்களா எனத் தெரியவில்லை. வளம் என்கிறீர்கள்; வளம் எங்கே இருக்கிறது எனவும் தெரியவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கைதான் அதிகரித்துள்ளது.
 எடப்பாடி பழனிசாமி: 2011 முதல் 2016-ஆம் ஆண்டு வரை சிறப்பான ஆட்சி தந்த காரணத்தினால்தான் தமிழக மக்கள் மீண்டும் அதிமுகவே ஆள வேண்டும் என வாக்களித்துள்ளனர். 32 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஓர் அரசாங்கம் சிறந்த முறையில் செயல்பட்டால்தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியும். வளத்தைக் காணமுடியவில்லை என துரைமுருகன் கூறுகிறார். 2011-இல் இருந்து இன்றுவரை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம்.
 கல்வியில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி படிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் உயர்ந்துள்ளது. 2011-இல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது உயர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை 100-க்கு 21 சதவீதம் என்ற அளவில் இருந்தது. அந்த சதவீதம் மேலும் அதிகரித்துள்ளது. இது வளம் அல்லவா? இதைவிட என்ன வேண்டும்?
 துரைமுருகன்: பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தபோது (எடப்பாடி பழனிசாமி) அவ்வளவாகப் பேசமாட்டார். இப்போது உடனுக்குடன் எழுந்து பேசுகிறார். மகிழ்ச்சியளிக்கிறது. 2007 -08 -ஆம் ஆண்டு, திமுக ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் இருந்தது. இதை 2011 அதிமுக ஆட்சியில் 10 சதவீதமாக உயர்த்திக் காட்டுகிறோம் என்று கூறினீர்கள். ஆனால், 2013 -14 இல் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதம் என்ற அளவிலேயே இருந்தது. இதில் எந்த ஆட்சி சிறந்த ஆட்சி? தொழில் துறை, வேளாண் துறை என எல்லாத் துறைகளிலும் தமிழகம் பின்னடைவைச் சந்தித்துள்ளது.
 துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: 2011-இல் அதிமுக ஆட்சியில் வருவாய் உபரி இருந்தது. அதைக் கூறாமல் 2013 -ஐ மட்டும் துரைமுருகன் குறிப்பிடுகிறார். கடும் வறட்சி, உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை போன்றவற்றால் 2013 -இல் பொருளாதார வளர்ச்சி குறைவாக இருந்தது.
 எடப்பாடி பழனிசாமி: வேளாண் உற்பத்தியில் தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்காக மத்திய அரசின் பரிசையும் பெற்று வருகிறது என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com