சிரமமான நிதிச் சூழலிலும் மக்கள் நலத் திட்டங்கள்

சிரமமான நிதிச் சூழல் இருந்தாலும், மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு தொய்வின்றிச் செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
சிரமமான நிதிச் சூழலிலும் மக்கள் நலத் திட்டங்கள்

சிரமமான நிதிச் சூழல் இருந்தாலும், மக்கள் நலத் திட்டங்களை தமிழக அரசு தொய்வின்றிச் செயல்படுத்தி வருவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.
 சட்டப் பேரவையில் கடந்த 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீது நான்கு நாள்களாக நடந்த விவாதங்களுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வியாழக்கிழமை பதிலளித்துப் பேசியது: நிதி மேலாண்மையில் பொறுப்புடனும் மத்திய நிதிக் குழு பரிந்துரையிலுள்ள வரையறைக்குள்ளும் தமிழக அரசு சிறப்பாக நிதி நிலையைப் பராமரித்து வருகிறது. அதேசமயம், சிரமமான நிதிச் சூழல் இருந்தாலும் கூட, மக்கள் நலத் திட்டங்களை அரசு தொய்வின்றிச் செயல்படுத்தி வருகிறது.
 வருவாய்ப் பற்றாக்குறை ஏன்?: கடந்த 2011 முதல் 2013-ஆம் ஆண்டு வரையில், தமிழகம் வருவாய் உபரியுள்ள மாநிலமாகத்தான் இருந்தது. மாநிலத்தில் பல புதிய திட்டங்களை அறிவித்தாலும், வரி வருவாய் வரவுகளில் நல்ல வளர்ச்சி இருந்தது. ஆனால், 2013-14-ஆம் ஆண்டு முதல் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இந்திய அளவில் மந்த நிலை ஏற்பட்டது. இது தமிழகத்திலும் எதிரொலித்தது. இதனாலேயே, வருவாய்ப் பற்றாக்குறை உருவானது.
 மத்திய அரசு செவிசாய்க்கவில்லை: வருவாய்ப் பற்றாக்குறை உருவான நிலையில், தமிழகத்துக்கு ஆண்டுக்குக் கிடைத்து வந்த நிதிப் பகிர்விலும் சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு குறைவு ஏற்பட்டது. இதற்கான ஈட்டு மானியத்தை அளிப்பதற்கான பரிந்துரைகளையும் வழங்க மத்திய நிதிக் குழு தவறி விட்டது. மத்திய அரசிடம் இருந்து நமக்கான நிதிப் பகிர்வில் உரிய நியாயம் கிடைக்கவில்லை. நிதி குறைக்கப்பட்டுள்ளது.
 நல்ல முன்னேற்றம்: உதய் மின் திட்டம், ஊதியக் குழு பரிந்துரைகள் நடைமுறை போன்றவற்றால் செலவு அதிகரித்து வரும் நிதியாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.18,370 கோடியாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. எனினும், வரி வருவாய் வளர்ச்சியில் இப்போது நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வரி வருவாய் வளர்ச்சி உயரும் போது வருவாய்ப் பற்றாக்குறை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
 தனிநபர் வருவாய் உயர்வு: வளர்ச்சியைப் பொருத்தவரையில், ஒரு தனிநபருடைய வருமானத்தை வைத்து அந்த மாநிலத்தின் வளர்ச்சி, அங்கு வாழும் மக்களின் ஆரோக்கியமான நிலையை நாம் அறிந்து கொள்ளலாம். கடந்த 2011-12-ஆம் நிதியாண்டில், நமது தனி நபர் வருமானம் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 600. ஆனால், இப்போது தனிநபர் வருமானம் ரூ.1.88 லட்சமாக உயர்ந்துள்ளது. தனிநபர் வருமானம் ரூ.85,000 அதிகரித்துள்ளது.
 பீதியைக் கிளப்ப வேண்டாம்: உலக அளவில் கடன் பெற்று வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாகும். தமிழக அரசும் ஆண்டுதோறும் நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே கடன் திட்டப் பணிகளைச் செய்து வருகிறது. வரும் நிதியாண்டில் மத்திய அரசு அனுமதித்துள்ள கடன் அளவு ரூ.47 ஆயிரத்து 887 கோடியாக இருந்தாலும், நாம் பெறவுள்ள கடன் ரூ.43 ஆயிரத்து 962 கோடி ஆகும். வரி வருவாயில் வளர்ச்சியும், செலவுகளைக் கட்டுப்படுத்துவதில் முன்னேற்றமும் ஏற்படும் பட்சத்தில் இந்த ஆண்டே கடன் அளவும், நிதிப் பற்றாக்குறையும் குறைய வாய்ப்புள்ளது. இதற்கான முயற்சிகளில் அரசு தீவிரமாக ஈடுபடும். எனவே, கடன் அளவு உயர்ந்து கொண்டே வருகிறது என பொது மக்களிடம் பீதியைக் கிளப்ப வேண்டாம். கடன் வரம்பு கட்டுக்குள்தான் இருக்கிறது என்றார் ஓ.பன்னீர்செல்வம்.
 குரல் வாக்கெடுப்பு: துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் பதிலுரையைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையானது குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
பானையின் ஓட்டையை அடைத்து சமையல் செய்கிறோம்
 பானையின் ஓட்டையை அடைத்து சமையல் செய்து மக்களுக்கு நல்லாட்சி என்ற உணவை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 சட்டப் பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதங்களுக்கு வியாழக்கிழமை பதிலளித்து அவர் பேசியது:- தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை, "ஓட்டைப் பானையில் செய்த சமையல்' எனச் சிலர் விமர்சித்துள்ளனர். சட்டியை ஓட்டையாக்கி விட்டுச் சென்றதே அவர்கள்தான். நாங்கள்தான் அந்த ஓட்டையை அடைத்து சமையல் செய்து வருகிறோம். மக்களுக்கு நல்லாட்சி என்ற உணவும் வழங்கிக் கொண்டிருக்கிறோம்.
 பாராட்டை எதிர்பார்க்கவில்லை: எனவே, அவர்கள் பாராட்டுவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. தமிழகத்தின் முன்னேற்றத்திலும், மக்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்திலும் எங்களது கவனத்தை முழுமையாகச் செலுத்தி பணியையும், பயணத்தையும் வெற்றிகரமாகத் தொடர்வோம்.
"காவிரி பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க கூடிப் பேசுவோம்'
 காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகளுடன் கூடி ப் பேசுவோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
 சட்டப்பேரவையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக அரசின் கவனத்தை ஈர்த்து மு.க.ஸ்டாலின் பேசியது: காவிரி மேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் 6 வாரங்களுக்குள் அமைக்க முடியாது என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
 காவிரி விவகாரம் குறித்து மாநிலத் தலைமைச் செயலாளர்களின் கூட்டம் முடிந்த பிறகு காவிரி மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் இல்லை என்று மத்திய நீர்வளத் துறையின் செயலாளர் யு.பி.சிங் கூறினார். இப்போது, மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
 உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்த வேண்டிய, அந்தத் துறையின் செயலாளரே இப்படியொரு கருத்தைக் கூறியிருப்பதை ஏற்க முடியாது. ஆந்திர மாநிலத்தின் பிரச்னையில் மத்திய அரசுக்கு அழுத்தம் தருவதற்காக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரும் நடவடிக்கையை அந்த மாநில அரசு எடுத்துள்ளது.
 அதுபோல, தமிழகத்தின் பிரச்னை தொடர்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டுமென நாம் பல முயற்சிகளில் ஈடுபட்டும், எதற்கும் பயனில்லை என்ற சூழலில், மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை அதிமுக அரசு கொண்டு வந்து, அழுத்தம் தர வேண்டும்.
 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால், உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரும் பணியில் அரசு உடனே ஈடுபட வேண்டும் என்றார்.
 அதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த பதில்: உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு இன்னும் 5 நாள்கள்தான் இருக்கின்றன. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் தினமும் நினைவூட்டி வருகிறார். மத்திய அரசை தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 13 நாள்களாக அதிமுக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.
 உரிய அழுத்தம் அளிக்கப்படுகிறது: சட்டத்தின் மூலமாகவும், நீதிமன்றத்தின் மூலமாகவும் உரிய அழுத்தம் கொடுத்து வருகிறோம். மத்திய நீர்வளத் துறை செயலாளர் கூறிய கருத்து குறித்து எங்களுக்கு முழுமையான தகவல் கிடைக்கவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அனைவரும் கூடிப் பேசுவோம். காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவையும் அமைப்பதற்கு அழுத்தம் கொடுப்போம்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com