திட்டப் பணிகளுக்கு ரூ.10,940 கோடி: துணை நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு

பல்வேறு திட்டப் பணிகளுக்காக இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் மொத்தம் ரூ.10,940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

பல்வேறு திட்டப் பணிகளுக்காக இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் மொத்தம் ரூ.10,940 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
 சட்டப்பேரவையில் வியாழக்கிழமை 2017-18-ஆண்டுக்கு இறுதி துணை நிதிநிலை அறிக்கையை அளித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியது: துணை நிதிநிலை அறிக்கையின் மொத்த மதிப்பீடு ரூ.10,940 கோடியாகும். இவற்றில் ரூ.6,957 கோடி வருவாய்க் கணக்கிலும், ரூ.3,982 மூலதனம் மற்றும் கடன் கணக்கிலும் அடங்கும்.
 ஒக்கி புயல் உள்பட பல்வேறு இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரி செய்ய மேற்கொள்ளப்பட்ட நிவாரணம், மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளுக்காக ரூ.327.32 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 பிரதமரின் க்ரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக ரூ.213.63 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு உணவு மானியத்துக்கான நிலுவைத் தொகையை வழங்குவதற்காக கூடுதலாக ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய கூடுதலாக ரூ.214.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பெருந்திட்ட வளாகம் கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க ரூ.137.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக வழங்கப்பட்ட ரூ.3001.47 கோடியை பங்கு மூலதனமாக மாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக ரூ.2,671.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 பிரதமரின் கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் சாலைகளை மேம்படுத்துவதற்காக ரூ.119.58 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலைகள், முக்கிய வட்டச் சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக, கூடுதலாக ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் குடியிருப்புகள் கட்டுவதற்காக கூடுதலாக ரூ.549.79 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 2017-ஆம் ஆண்டு அக். 1-ஆம் தேதி முதல் ஓய்வூதியர்களுக்கு உயர்த்தப்பட்ட ஓய்வூதியங்களையும், ஓய்வுகாலப் பலன்களையும் வழங்க கூடுதலாக ரூ.802.56 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com