தேர்வாய்க் கண்டிகை நீர்த் தேக்கத்திலிருந்து சென்னைக்கு குடிநீர்

தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கப் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், இன்னும் 5 மாதங்களில் அந்த நீர்த்தேக்கத்திலிருந்து
தேர்வாய்க் கண்டிகை நீர்த் தேக்கத்திலிருந்து சென்னைக்கு குடிநீர்

தேர்வாய்க் கண்டிகை நீர்த்தேக்கப் பணிகள் 85 சதவீதம் முடிந்துவிட்டன என்றும், இன்னும் 5 மாதங்களில் அந்த நீர்த்தேக்கத்திலிருந்து சென்னை மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
 சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியது:
 சென்னையில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை மக்களின் குடிநீருக்கு என்றே 1983 -இல் கிருஷ்ணா நதிநீர் திட்டத்தை என்.டி.ராமாராவிடம் பேசி, எம்ஜிஆர் கொண்டு வந்தார். அந்தத் திட்டத்தின் மூலம்கூட தமிழகத்துக்கு தண்ணீர் முறையாக தற்போது பெற முடியாத நிலை உள்ளது என்றார்.
 அப்போது கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் குறுக்கிட்டுக் கூறியது: இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கிருஷ்ணா கால்வாய் திட்டத்துக்கான முயற்சி நடைபெற்றது. முதல்வராக இருந்த கருணாநிதி அந்தத் திட்டத்தை ஏற்கவில்லை. "வீராணம் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவோம்' என்று கூறிவிட்டார். ஆனால், வீராணம் திட்டம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்துதான் கிருஷ்ணா கால்வாய் திட்டத்தை கருணாநிதி ஏற்றார் என்றார்.
 அமைச்சர் ஜெயக்குமார்: கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை கருணாநிதி கொண்டு வந்ததைபோல் துரைமுருகன் கூறினார். கருணாநிதியும் என்.டி.ஆரும் ஒரு குடத்தில் நீரை வைத்து கிருஷ்ணா கால்வாய் திட்டம் நிறைவேறியதுபோல காட்டினர். ஆனால், கிருஷ்ணா நிதி நீர் திட்டத்தின் மூலம் தமிழகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதற்கு முழுக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதாதான்.
 துரைமுருகன்: எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டம் என்று கூறித்தான் பேசினேன். அமைச்சர் ஜெயக்குமார் கூறுவதுபோல கருணாநிதியும் என்.டி.ராமராவும் கிருஷ்ணா நீர் பெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. கருணாநிதியும் சந்திரபாபு நாயுடுவும்தான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
 முதல்வர் எடப்பாடி பழனிசாமி: கிருஷ்ணா நீரை பெறுவதற்கு முழுமையாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவைக்கூட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நானும் சந்தித்துப் பேசினோம். 5 டிஎம்சி நீரில் ஆந்திரத்தின் பங்காக 2.5 டிஎம்சி நீரைக் கொடுத்து விடுகிறோம். மீதம் 2.5 டிஎம்சி நீரை தெலங்கானா முதல்வரிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்.
 இப்படி ஏதாவது காரணம் காட்டியே நமக்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். இப்போதுகூட தொடர்ந்து கடிதம் எழுதியதன் விளைவாக கிருஷ்ணா நிதி நீர் திட்டம் மூலம் 2 டிஎம்சி நீர் கிடைத்துள்ளது.
 சென்னை மக்களுக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்காக கண்ணன்கோட்டை தேர்வாய்க் கண்டிகை நீர்தேக்கம் கட்டப்பட்டு 1 டிஎம்சி தண்ணீர் தேக்கக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்கப் பணிகள் கிட்டத்தட்ட 85 சதவீதம் முடிவடைந்துள்ளன.
 எஞ்சிய 15 சதவீத பணிகளையும் விரைவாக முடிந்து சென்னை மாநகர மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும் என்றார் முதல்வர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com