நெம்மேலி, பேரூரில் விரைவில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பேரூர், நெம்மேலி ஆகிய இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
நெம்மேலி, பேரூரில் விரைவில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் பேரூர், நெம்மேலி ஆகிய இடங்களில் கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
 மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ், சென்னை ஐஐடி, நபார்டு வங்கி, தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் ஆகியன இணைந்து இருதின நீர் பாதுகாப்பு மாநாட்டை சென்னையில் நடத்துகின்றன. வியாழக்கிழமை இம்மாநாட்டை மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
 பின்னர் தமிழகத்தில் நீர் பாதுகாப்பை உறுதி செய்வதில் உள்ள வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற ஆய்வறிக்கையை அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளியிட , அதை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியது:
 கடந்த 2 ஆண்டுகளில் பருவ மழையின் மூலம் கிடைக்கும் நீரின் அளவு பெருமளவு குறைந்திருப்பதால், நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் பகுதி - 2 ஒன்றும், பேரூரில் 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட நிலையம் ஒன்றும் விரைவில் அமைக்கப்படவுள்ளன.
 தமிழகத்தில் தற்போது நாளொன்றுக்கு 7,382 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. நாட்டிலேயே தமிழகத்தில் தான் ஊரகப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் 99.11 சதவீதம் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படு வருகிறது.
 அமைச்சர் டி. ஜெயக்குமார்: மக்கள் தொகை மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில் நீர் அத்தியாவசியத்தை நாம் உணர வேண்டும். குறிப்பாக குடிநீர், விவசாயம் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு முக்கியம் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் 2016-17ஆம் ஆண்டில் குடிமராமத்துப் பணிக்காக ரூ. 800 கோடி அளவுக்கு செலவிடப்பட்டுள்ளது.
 மேலும் 3 ஆண்டுகளில் வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் தடுப்பணைக் கட்ட ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏரிகள், குளங்கள்,அணைகள் தூர் வாரப்படுகின்றன. நிலத்தடி நீர் சேமிக்கும் திட்டத்தை தமிழகம் தான் முதலில் செயல்படுத்தியது. வருங்காலங்களில் மாநிலத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அரசு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார்.
 ஆர்பிஐ முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன்: நிலத்தடி நீரை சேமிக்க மழைநீர் சேகரிக்கும் திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசு, இந்தத் திட்டம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை மேம்படுத்தினால் மட்டுமே விவசாயம், சென்னை போன்ற பெருநகரங்களின் நீர்த் தேவையை எதிர்கொள்ள முடியும். நீர் தேவைக்கு ஏற்ப தண்ணீர் கிடைக்கும் இடங்களை விரிவுப்படுத்த வேண்டும். இதற்கான நீர்த் தேக்கங்களும் மேம்படுத்தப்பட வேண்டும். இவற்றையெல்லாம் செய்தால் நீர் பாதுகாப்பை நம்மால் உறுதி செய்ய முடியும்.
 சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் இயக்குநர் கே.ஆர்.சண்முகம், மாநாட்டுத் தலைவர் கே.ஸ்கந்தன், நபார்டு வங்கியின் தலைமை பொது மேலாளர் ஜின்னா, தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் அசோக் நடராஜன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com