புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
புதுச்சேரியில் 3 எம்.எல்.ஏ.க்கள் நியமனம் செல்லும்

புதுச்சேரி சட்டப்பேரவைக்கு 3 நியமன எம்.எல்.ஏ.க்களை நியமித்து மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
 3 எம்.எல்.ஏ.-க்கள் நியமனம்: யூனியன் பிரதேச அரசுகளுக்கான சட்டத்தின்படி, புதுச்சேரி சட்டப்பேரவைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன், பொருளாளர் கே.ஜி.சங்கர், கட்சியின் ஆதரவாளர் எஸ்.செல்வகணபதி ஆகிய 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து, துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவிட்டார். இந்த நியமன உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்ததையடுத்து, ஜூலை 4-ஆம் தேதி 3 பேருக்கும் ஆளுநர் கிரண் பேடியே பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 மறுப்பு: புதுச்சேரி யூனியன் பிரதேச விதிகளின்படியும், அரசியல் சாசன சட்டத்தின்படியும் இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் பதவிப் பிரமாணம் தகுதி வாய்ந்த நபரால் மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி, இந்த நியமனம் செல்லாது என்றும் இந்த 3 பேரை சட்டப்பேரவைக் கூட்டத்துக்கு அனுமதிக்க முடியாது என்றும் கடந்த ஆண்டு நவம்பரில் சட்டப்பேரவைத் தலைவர் அறிவித்ததாக பேரவைச் செயலாளர் உத்தரவிட்டார்.
 வழக்குகள்: சட்டப்பேரவைச் செயலாளரின் இந்த உத்தரவை எதிர்த்து, நியமன எம்.எல்.ஏ.க்களான சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகிய 3 பேர் சார்பிலும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லாது என அறிவிக்கக் கோரி, புதுச்சேரி ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ.வும், முதல்வரின் நாடாளுமன்றச் செயலருமான லட்சுமி நாராயணன் வழக்குத் தொடுத்தார். ஆளுநருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டப் பிரிவுகளை ரத்து செய்யக் கோரி எஸ்.தனலட்சுமி என்பவர் பொதுநல வழக்குத் தொடுத்தார். இந்த வழக்குகளில் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக உயர் நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.
 நியமனம் செல்லும்: இந்த வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு வியாழக்கிழமை தீர்ப்பளித்தது. அதில், "யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை, துணைநிலை ஆளுநருக்கு நியமன எம்.எல்.ஏ.க்களை தன்னிச்சையாக நியமிக்க அனைத்து விதமான அதிகாரங்களும் உள்ளன. குடியரசுத் தலைவர், துணைநிலை ஆளுநரை ஒரு நிர்வாகியாக நேரடியாக நியமிக்கிறார். இதனால், அசாதாரணச் சூழலில் சட்டப்பேரவையைக் கலைக்கக்கூட துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. எனவே, நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்கும் போது அவர் அமைச்சரவையின் கருத்துகளைக் கேட்க எந்தவிதமான கட்டாயமும் இல்லை. அதேபோன்று, இந்த நியமன எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சட்டப்பேரவைத் தலைவருக்கு எந்த அதிகாரமும் இல்லை.
 பேரவைத் தலைவரின் உத்தரவு ரத்து: எனவே, இந்த 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் நியமனத்துக்கு எதிராக குடியரசுத் தலைவரிடம்தான் முறையிட வேண்டும். இதனை எதிர்த்து பொதுநல வழக்குத் தொடுக்க முடியாது. இந்த எம்.எல்.ஏக்களின் நியமனம் செல்லும் என்பதால், இவர்களை பேரவைக்குள் அனுமதிக்க மறுத்து சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இவர்களைப் பேரவைக்குள் அனுமதிக்க வேண்டும். இந்த நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
 புதுவை அரசியலில் பரபரப்பு: இந்தத் தீர்ப்பால் புதுச்சேரி அரசியல் களத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 இந்நிலையில், வரும் மார்ச் 26-ம் தேதி புதுவை சட்டப்பேரவை கூடுகிறது. அதில் நியமன எம்எல்ஏக்கள் இடம் பெறுவார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தங்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வந்துள்ள நிலையில், நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத் தொடர் என்பதால் இதில் எப்படியாவது பங்கேற்றுவிட வேண்டும் என்பதில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆர்வமாக உள்ளனர்.
 ஆனால், இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு தயாராகி வருகிறது. வழக்கின் முக்கிய மனுதாரரான முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் க.லட்சுமிநாராயணன், தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
 சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு, பேரவைத் தலைவரை கட்டுப்படுத்துமா, இல்லையா என்பது மேல்முறையீட்டின்போது தெரிந்துவிடும். இருப்பினும், மார்ச் 26-ஆம் தேதி நடைபெறும் பேரவைக் கூட்டத்தொடரில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க பேரவைத் தலைவர் வெ.வைத்திலிங்கம் அனுமதிப்பாரா அல்லது தனக்கு வானளாவிய அதிகாரம் இருக்கிறது எனக் கூறி மறுப்பு தெரிவிப்பாரா என்பது போகப் போகத் தெரியும்.
 புதுவை துணை நிலைஆளுநர்-அமைச்சரவை இடையே கடந்த 3 மாதங்களாக சுமுகமான நிலை இருந்து வருகிறது. இந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்களுக்குச் சாதகமாக தீர்ப்பு வெளிவந்துள்ள நிலையில், புதுவை அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 ஜனநாயகம் வலுப்பெறும்: கிரண் பேடி
 மூன்று எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும் என்று புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
 இதுகுறித்து புதுவை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி:
 மத்திய அரசு நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும், எனது அதிகாரத்துக்கு உள்பட்டு சட்ட ரீதியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்தேன். நான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும். அரசின் பொறுப்புடைமை அதிகரிக்கும். மக்களுக்காக களத்தில் பணியாற்ற மேலும் 3 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்துள்ளனர்.
 நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மனுதாரர்களுக்கு தார்மிக உரிமை உள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் சட்டப்பேரவைத் தலைவர் என்ன முடிவை எடுப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்அவர். பேட்டியின்போது ஆளுநரின் செயலர் தேவநீதிதாஸ் உடன் இருந்தார்.
 அமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு
 புதுவையில் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் நகல் கிடைத்தவுடன் அமைச்சரவையைக் கூட்டி கலந்துபேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
 புதுச்சேரியில் நாராயணசாமி செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:
 புதுவை மாநிலத்தில் 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக உள்துறை அமைச்சகத்திடம் இருந்து புதுவை சட்டப்பேரவைக்கும், மாநில அரசுக்கும் கடிதம் வந்தது. அதில், 3 பேரின் பெயர்கள் இருந்தன. ஆனால், அவர்களின் தந்தை பெயர், முகவரி இல்லை.
 உள்துறை நியமனம் செய்த எம்.எல்.ஏ.க்களின் நியமனம் செல்லாது என முதல்வரின் நாடாளுமன்றச் செயலர் லட்சுமிநாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதேபோல, புதுச்சேரியைச் சேர்ந்த பெண் ஒருவரும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். தங்களது நியமனத்தை அங்கீகரிக்கக் கோரி எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கப்பட்ட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர்.
 இந்த 3 வழக்குகளும் விசாரணைக்கு வந்தபோது, 2 வழக்குகளில் மட்டும் புதுவை அரசு பிரதிவாதியாகச் சேர்ந்தது. பிரதிவாதியாக புதுவை அரசு இருப்பதால், தீர்ப்பின் நகல் கிடைத்ததும் அதை முழுவதும் படித்துப் பார்த்துவிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்.
 அமைச்சரவை, எம்.எல்.ஏ.க்களுடன் கலந்துபேசி உரிய முடிவை எடுப்போம் என்றார் அவர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com