மத்திய நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்வு தமிழகத்துக்கு நியாயமாக இருக்க வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

மத்திய நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்வு தமிழகத்துக்கு நியாயமான அளவில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

மத்திய நிதி ஆணையத்தின் நிதிப் பகிர்வு தமிழகத்துக்கு நியாயமான அளவில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.
 சட்டப்பேரவையில் அரசின் கவனத்தை ஈர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியது: 15-ஆவது மத்திய நிதி ஆணையத்துக்கு கொடுக்கப்பட்டிருக்கக்கூடிய ஆய்வு வரம்பு, மாநிலங்கள் நிதித் தன்னாட்சியைப் பாதிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 அதற்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அளித்த விளக்கம்: 15-ஆவது மத்திய நிதி ஆணையம் என்.கே.சிங் தலைமையில் அமைப்பதற்கான அறிவிக்கையை, 2017- ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் பரிந்துரைகள் 2020- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி முதல் 2025- ஆம் ஆண்டு மார்ச் -31 ஆம் தேதி வரை 5 ஆண்டு காலத்துக்கு இருக்கும்.
 அதிகார வரம்புகள் மாற்றியமைப்பு: மத்திய அரசிடமிருந்து மாநில அரசுகளுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி அளவுகள் குறித்து, இந்த குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும். கடந்த கால மத்திய நிதி ஆணையங்களை போல அல்லாமல், 15-ஆவது மத்திய நிதி ஆணையத்துக்கான அதிகார வரம்புகள், மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
 குறிப்பாக, கடந்த காலங்களில் மத்திய நிதி ஆணையத்தின் நிதிப்பகிர்வு பரிந்துரைகள், 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில்தான் அமைந்திருந்தன. ஆனால், 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2011 -ஆம் ஆண்டு மக்கள் தொகையின் அடிப்படையில் நிதிப் பகிர்வை மேற்கொள்ள வழிவகுக்கிறது.
 தமிழகம் எதிர்ப்பது ஏன்? தமிழ்நாடு போன்ற முன்னேறிய மாநிலங்கள் மக்கள் தொகையைச் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தியுள்ள நிலையில், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காத மாநிலங்கள், தமிழ்நாடு போன்ற மாநிலங்களைவிட கூடுதல் நிதி உதவி பெறும் வகையில், இந்த அதிகார வரம்பு உள்ளது. அதனால்தான் தமிழக அரசு இதைக் கடுமையாக எதிர்க்கிறது.
 மக்கள் தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி, பிறப்பு விகிதம் இறப்பு விகிதத்துக்கு சமமான நிலையை அடைய எடுத்த நடவடிக்கைகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு சில வரம்புகள் இருந்தாலும், அவை தமிழகத்துக்குப் பாதகமாகவே இருக்கிறது.
 ஊக்கத் தொகையிலும் பாரபட்சம்: மத்திய அரசின் திட்டங்கள் எல்லா மாநிலங்களுக்கும் சமமாகப் பகிர்ந்து அளிக்கப்படுவதில்லை. அப்படி அளிக்கும் திட்டங்களுக்கும் பின்தங்கிய மாநிலங்களுக்கே அதிக நிதி ஒதுக்கப்படுகிறது. மத்திய அரசின் கொள்கைகளைத் திணிப்பதற்காக இது போன்ற அளவுகோல்களை அடிப்படையாகக் கொண்டு ஊக்கத் தொகை வழங்கப்படுவதை பல்வேறு மாநில அரசுகள் கடுமையாக எதிர்க்கின்றன.
 அதிகார வரம்பில் தலையீடு: மேலும், ஒரு திட்டம் ஜனரஞ்சகமான திட்டமா இல்லையா என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசு நிதி ஆணையத்துக்கு வழங்கினால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அதிகார வரம்பில் தலையிடுவதாகும்.
 தவறான முயற்சி: தமிழகத்தைப் பொருத்தவரை ஜனரஞ்சகமான திட்டங்கள் என்று எதுவும் இல்லை என்றாலும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை எட்டவும், பொருளாதார சமநிலையை அடையவும், பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். இத்தகைய பொருத்தமற்ற காரணிகளை மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்புக்குள் கொண்டு வந்திருப்பது, ஒரு தவறான முயற்சி என தமிழக அரசு கருதுகிறது.
 மத்திய அரசுக்கு விரைவில் கடிதம்: இந்தக் கருத்துகளின் அடிப்படையில், இந்த தேவையற்ற ஷரத்துக்கள் நீக்கப்பட வேண்டும் என்றும், நியாயமான வகையில் நிதிப் பகிர்வு கணிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பப்படும்.
 தொடர்ந்து நிலைநாட்டப்படும்: 15-ஆவது மத்திய நிதி ஆணையம் கூட்டும் கலந்துரையாடல் கூட்டங்களில் எல்லாம், மத்திய நிதி ஆணையத்தின் அதிகார வரம்பை முழுமையாக ஏற்க முடியாது என்ற கருத்துகள் கடுமையாக வலியுறுத்தப்பட்டு, மாநிலத்தின் நிலை தொடர்ந்து நிலைநாட்டப்படும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com