விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 20 கோடி கையாடல்: ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணை

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 20 கோடி ஓய்வூதியர்கள் பணப் பலன் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.

விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ரூ. 20 கோடி ஓய்வூதியர்கள் பணப் பலன் கையாடல் செய்யப்பட்டுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர்.
 விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகக் கோட்டத்தில் விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மண்டலங்கள் உள்ளன. சுமார் 20 ஆயிரம் பேர் வேலை செய்து வருகின்றனர். ஓய்வூதியர்கள் 3 ஆயிரம் பேர் உள்ளனர்.
 விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை உள்ளிட்ட ஓய்வூதியப் பலன்கள் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ளதாக புகார் தெரிவித்து ஓய்வூதியர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
 போக்குவரத்துக் கழக ஊழியர்களும் சம்பள உயர்வு, ஓய்வூதியப் பலன்களை வழங்க வலியுறுத்தி, கடந்த ஜனவரியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 இதையடுத்து, ஊழியர்களுக்கான நிலுவைத் தொகையை வழங்க அரசு ரூ. 2,100 கோடி நிதியை ஒதுக்கியது. இதைத்த் தொடர்ந்து, கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஓய்வூதியர்களுக்கான நிலுவைப் பணப்பலனை தற்போது வழங்கி வருகின்றனர்.
 இந்த நிலையில், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமை அலுவலகத்துக்கு வியாழக்கிழமை விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் டி.எஸ்.பி. தேவநாதன், ஆய்வாளர் லட்சுமி தலைமையில் சென்று, போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி, ஓய்வூதியப் பிரிவு அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
 துணை மேலாளர் அலுவலகத்தில், கோப்புகளை ஆய்வு செய்து, மேலாளர், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். முற்பகல் 11 மணிக்குத் தொடங்கிய விசாரணை பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது. அங்கிருந்த ஆவணங்களை போலீஸார் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
 விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 2008-ஆம் ஆண்டு முதல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை தொகை வழங்குவதற்கான நிதியை அரசுத் தரப்பில் பெற்று வழங்கியுள்ளனர். இதற்காக, சென்னை தலைமை அலுவலகத்துக்கு ஓய்வு பெற்ற ஊழியர்களின் பட்டியலை அனுப்பியுள்ளனர்.
 அதில், ஓய்வு பெற்று ஏற்கெனவே பணப்பலன் பெற்ற ஓய்வூதியர்களின் பெயர்களையும் சேர்த்து முறைகேடான பட்டியலை அனுப்பி வைத்து, அதனடிப்படையில் 250-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்களின் பெயரில், தலா ரூ. 5 லட்சம் வருங்கால வைப்பு நிதியைப் பெற்று, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளதாகத் தெரிகிறது.
 அந்த ஓய்வூதியர்களை அணுகி தவறுதலாக உங்கள் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதாகக் கூறி, பணத்தைத் திரும்பப் பெற்று வந்துள்ளனர். இதையறிந்த ஓய்வூதியர்கள் சிலர், சென்னை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் தெரிவித்துள்ளனர். இதன்பேரில், விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனை நடத்தியது தெரிய வந்தது.
 இந்த முறைகேட்டில் ரூ. 20 கோடி அளவில் ஓய்வூதியர்களின் பெயரில் வங்கிக் கணக்குகளில் செலுத்தி, அதை வாங்கி கையாடல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில், முக்கிய அதிகாரிகள் வரை தொடர்பு இருக்கலாம் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்தனர்.
 இதுகுறித்து விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. தேவநாதனிடம் கேட்டபோது, ஓய்வூதியர்களின் பணப்பலன்களில் கையாடல் நடந்திருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், விழுப்புரம் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதுதொடர்பான ஆவணங்களையும் பறிமுதல் செய்து வந்து முதல் கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.
 விசாரணைக்குப் பிறகே எவ்வளவு முறைகேடு நடந்துள்ளது, அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் யார் என்பது தெரிய வரும். அதன் பிறகே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 தொடரும் முறைகேட்டால் அதிருப்தி: விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் போலி ஆவணம் தயாரித்து ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்ட புகாரில், தொடர்புடைய அதிகாரிகள், அலுவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓய்வூதியர்கள் நிதியில் கையாடல் செய்துள்ளதாக, அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com