அமைதியாகக் கவனிக்கிறார் ஜெயலலிதா!

"அமைதி, வளம், வளர்ச்சி'' என்று தமிழகம் முழுவதும் முழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதே வாசகத்துடன் சட்டப்பேரவையில் உருவப்படமாக நிற்கிறார். இந்தப் படம் திறக்கப்பட்டதற்கு
அமைதியாகக் கவனிக்கிறார் ஜெயலலிதா!

"அமைதி, வளம், வளர்ச்சி'' என்று தமிழகம் முழுவதும் முழங்கிய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அதே வாசகத்துடன் சட்டப்பேரவையில் உருவப்படமாக நிற்கிறார். இந்தப் படம் திறக்கப்பட்டதற்கு பிறகு நடைபெற்ற முதல் பேரவைக் கூட்டத்தில் ஜெயலலிதாவின் படத்தையொட்டி சிறு சுவாரஸ்யம். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவரின் படத்தைத் திறக்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்த திமுகவினர் எதிரில் ஜெயலலிதாவின் படத்தை எப்போதும் பார்த்தவாறும், எதிர்ப்பை மீறி திறந்து வைத்த அதிமுகவினர் படத்தைப் பார்க்க முடியாதவாறு திரும்பியும் உட்கார்ந்திருந்தனர். இந்த முரணான மாறுதல் போல நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் முழுவதும் திமுக - அதிமுக நடவடிக்கையிலும் பல மாறுதல்கள்.

வெளிநடப்பு குறைவு: கடந்த காலக் கூட்டத்தொடர்களில் எல்லாம் வெளிநடப்பு செய்வதையே திமுக அதன் தினப்பணியாக வைத்திருந்தது. பேரவையில் திமுக என்ன செய்தது என்று கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே வெளிநடப்பு செய்வதாக சமூக வலைத்தளங்களில் கேலி பேசப்பட்டன. இந்த முறை திமுக முழுமையாக வெளிநடப்பைக் குறைத்துக் கொண்டது.
 பேரவையின் முதல் நாளில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2018 -19-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அன்று, கருப்புச் சட்டை அணிந்து வந்த திமுகவினர், பன்னீர்செல்வம் நிதிநிலை அறிக்கையைப் படிக்க ஆரம்பித்ததும், அவையைப் புறக்கணித்து உடனே வெளிநடப்பு செய்தனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு சிறப்புக் கூட்டம் நடத்தாததால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.
 ஆனால், அன்றைய தினம் மாலையே அரசு சிறப்பு அமர்வைக் கூட்டி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி 6 வாரக் காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது. இந்தக் கூட்டத்திலும் திமுகவினர் ஏன் கருப்புச் சட்டை அணிந்தே பங்கேற்றனர் என்பது வியப்பு. ஒரே நாளில் இரண்டு சட்டை போடுகிறார்கள் என்ற அரசியல் பேச்சையும் இதன் மூலம் ஒருவகையில் திமுக தவிர்த்துக் கொண்டதாகவும் பார்க்கலாம்.
 தவற விட்ட திமுக: விசுவ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் அவைக்கு வெளியே கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுபோன்ற விவகாரத்தில் முதலில் எதிர்ப்புக் குரல் கொடுப்பது கருணாநிதியாகத்தான் இருப்பார். ஆனால், ஸ்டாலின் அமைதி காத்தார். பேரவையிலும், கொங்கு நாடு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு, மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவர் தமிமூன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் ஆகியோர் முதலில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதும் திமுக அமைதிகாத்தது.
 ரத யாத்திரை திருநெல்வேலி அருகே வந்துபோது, மறியல் போராட்டம் நடத்திய திருமாவளவன், ஜவாஹிருல்லா உள்பட பல தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் திடீரென திமுக இந்த விவகாரத்தில் குதித்தது. ரத யாத்திரைக்கு அனுமதி கொடுத்தது எப்படி என்று பேரவையில் மு.க.ஸ்டாலின் ஆவேசம் காட்டினார். அவையை நடத்தவிடாமல் திமுக உறுப்பினர்கள் முடக்கினர். எனினும், அந்த அரசியல் பந்து திமுகவிடமிருந்து பறிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக திடீரென ஆவேசத்துடன் அவையின் மையத்துக்கு வந்த தமிமூன் அன்சாரியின் கோஷம் திமுகவைப் பின்னுக்குத் தள்ளியது. அனைவரின் பார்வையும் அன்சாரியிடமே போக, பேரவைத் தலைவர் தனபால் எச்சரித்ததுடன், அனைவரையும் அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றினார். தலைமைச் செயலகத்துக்கு வெளியில் சாலை மறியலில் ஈடுபட்டு மு.க.ஸ்டாலின் கைதானார். அத்துடன் ரத யாத்திரை விவகாரம் கைவிடப்பட்டது.
 பயிர்க் காப்பீடு அதிர்ச்சி: பொதுவாக எந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பினாலும் ஆதாரம் தர வேண்டும் என்பதும், ஆதாரத்தைக் கொடுத்தால் அவை கூடுவதற்கு முன்பே காட்டி அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்பதும் பேரவைத் தலைவரின் நடைமுறை. அந்த அடிப்படையில் குட்கா, பான்மசாலா போன்றவை சர்வ சாதாரணமாகக் கிடைக்கின்றன என்று பேரவையிலேயே எடுத்து வந்து காட்ட, அது பெரிய சர்ச்சையானது. திமுகவின் 21 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பும் அளவுக்குச் சென்றது.
 ஆனால், இந்த முறை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டி பேசும்போது, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீடாக ரூ.5 மட்டும் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி, ஆதாரமாக காசோலையையும் காண்பித்தபோது, எல்லோரும் அதிர்ச்சியடைந்தார்களே ஒழிய, பிரச்னை எதுவும் எழவில்லை. பேரவைத் தலைவர் அனுமதித்தார் என்பதுடன், அமைச்சர்களும் ஒத்துக் கொண்டதுதான் ஆச்சரியம். கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, இதுபோல நாகப்பட்டினம் விவசாயிகளுக்கும் குறைவான தொகையே கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் மூலம் இது சரிசெய்யப்படும் என்றார். இதை வேளாண்துறை அமைச்சரும் ஆமோதித்தார். இதர அமைச்சர்கள் ஒத்துக்கொண்டு அமைதி காத்தனர் என்பது எப்போதும் இல்லாதது.
 ஸ்டாலினின் ஆதரவு: ரஜினியின் பின்னணியில் பாஜகவும், கமலின் பின்னணியில் திமுகவும் இருப்பதாக சிலர் பேசி வருகின்றனர். அதிமுக உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் பேசும்போது ரஜினியையும், கமலையும் அவையில் மறைமுகமாகச் சாடிப் பேசினார். அப்போது மு.க.ஸ்டாலின் எழுந்து, அவையில் இல்லாதவர்கள் குறித்துப் பேசக் கூடாது, அதனை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார். அது உடனே, ஏற்கப்பட்டு, பேரவைத் தலைவரால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. ஸ்டாலின் எழுந்து குரல் கொடுத்ததும், அது உடனே நீக்கப்பட்டதன் பின்னணியிலும் அரசியல் உண்டு.
 எதிர்ப்பு - சமாளிப்பு: நிதி நிலை அறிக்கை மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் அவருக்கே உரிய சாதுர்யத்துடன் அரசுக்கு எதிராக கடும் எதிர்ப்பை முன் வைத்தார்.
 அமைதி, வளம், வளர்ச்சி என்பதுதான் அரசின் குறிக்கோள் என்கிறீர்கள். ரெüடிகள் அரிவாளால் கேக் வெட்டி கொண்டாடுகிறார்கள். இது தான் அமைதியா என்று துரைமுருகன் கூறியபோது, ஆத்திரப்பட வேண்டிய அதிமுக உறுப்பினர்களும் சேர்ந்தே சிரித்தனர் என்பதுதான் நிஜம். பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, ரெüடிகள் திடீரென உருவாவதில்லை. உங்கள் ஆட்சியில் அவர்களைக் கண்டுபிடிக்கவில்லை. எங்கள் ஆட்சியில் கண்டுபிடித்துள்ளோம். அவ்வளவுதான் என்று சமாளித்தார்.
 அதைத் தொடர்ந்தும் துரைமுருகன் பல அஸ்திரங்களை அதிமுக அரசுக்கு எதிராக வீசினார். அத்தனை அஸ்திரங்களையும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்தவாறு பதில் அளித்து சமாளித்தார். இந்த அணுகுமுறை திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. முதல்வர் ஆத்திரப்படாமல் சிரித்தபடியே பேசுகிறார் என்று திமுக எம்.எல்.ஏ., ஒருவர் வெளிப்படையாகவே கூறினார்.
 இந்த அணுகுமுறை மாற்றம் ஜெயலலிதா இல்லாத நிலையில் ஏற்பட்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
 நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு கடன் பெற்று, இன்னும் பணி தொடங்காத நிலையில் வட்டி மட்டுமே கட்டுகிறீர்களே என்று துரைமுருகன் கேள்வி எழுப்பியபோது, உள்ளாட்சித் துறை அமைச்சர் உண்மையிலேயே பதில் சொல்ல முடியாமல் திணறிப் போனார்.
 இதே நிலை நீடித்த நிலையில் ஒரு கட்டத்தில், அண்ணன் மூத்த உறுப்பினர் (துரைமுருகன்), அனுபவம் வாய்ந்தவர் இன்று ஏன் இப்படிப் பேசுகிறார் என்றே தெரியவில்லை என்றார் அமைச்சர்.
 இந்தப் பாசப் போராட்டம் திமுக - அதிமுக உறுப்பினர்களிடையே அவையில் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இந்த மாறுதல்கள் அனைத்தையும் உருவப்படத்திலிருந்து ஜெயலலிதா அமைதியாகக் கவனித்து வருகிறார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com