ஆதரவற்ற பெண் மனநல நோயாளிகளுக்கு ஆதரவாக 5 அரசு மையங்கள் பணிகள் தீவிரம்

மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் 5 மையங்கள் தமிழகத்தில் விரைவில் செயல்பட உள்ளது.
ஆதரவற்ற பெண் மனநல நோயாளிகளுக்கு ஆதரவாக 5 அரசு மையங்கள் பணிகள் தீவிரம்

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டு தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பெண்களை மீட்டு அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு அளிக்கும் வகையில் 5 மையங்கள் தமிழகத்தில் விரைவில் செயல்பட உள்ளது.
 தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மத்திய-மாநில அரசுகள் இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இந்த மையங்களுக்கான உள்கட்டமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மன நலம் தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோருக்கு உடல் நலத்தால் பாதிக்கப்படுவோரைக் காட்டிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது பெரும்பாலான மனநல மருத்துவர்களின் கூற்றாகும்.
 ஏனென்றால் மனநலம் பாதிக்கப்பட்டால் அது ஒருவரின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிவிடும். பொதுவாக மனநலம் தொடர்பான பாதிப்புகள் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளதை வீட்டில் உள்ளவர்கள் கண்டறிவதற்கே தாமதம் ஏற்படும். இதனால் பெரும்பாலான நேரங்களில் நோய் முற்றி ஆபத்தான கட்டத்துக்கு தள்ளப்படுவர்.
 பெண்களுக்கான மையங்கள்: அவ்வாறு மனச்சிதைவு உள்ளிட்ட தீவிர மனநல பாதிப்புக்கு உள்ளானவர்கள் குடும்பத்தினரை பிரிந்து விடும் நிலை ஏற்படுகிறது. ராமேஸ்வரம், ஏர்வாடி உள்ளிட்ட இடங்கள், கோயில்கள் உள்ளிட்ட இடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை கொண்டு விடும் நிலைகூட ஏற்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்படிப்பட்ட நோயாளிகள் தங்கள் உடை, தோற்றம் குறித்து அக்கறை கொள்ளாமல், தெருக்களில் சுற்றித் திரியத் தொடங்குவர். இவற்றில் ஆண் நோயாளிகளைக் காட்டிலும், பெண்களே கூடுதலான சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். மேலும் பாலியல் வன்கொடுமை, வன்முறை உள்ளிட்டவற்றாலும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, முற்றிலும் பெண்களுக்கான பிரத்யேக சிகிச்சை மற்றும் ஆதரவு மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
 ஒரே காப்பகம்: இதுபோன்ற நோயாளிகளுக்கான அரசு காப்பகம் தமிழகத்திலேயே சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் மட்டுமே உள்ளது. ஒரு சில தனியார் மருத்துவமனைகளும் அதிகக் கட்டணத்தில் இந்தச் சேவையை அளித்து வருகின்றன. இந்நிலையில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டோரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வருவதிலும் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன.
 குறிப்பாக, அந்த நோயாளிகள் மிகவும் உக்கிரமாக இருப்பதால், அவர்களைப் பயணிக்க வைத்து சென்னைக்கு கொண்டு வருவது சிரமமான காரியம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அதன் காரணமாக தமிழகத்தின் வேறு ஐந்து இடங்களில் இந்த மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
 5 மையங்கள்: அதன்படி, தேனி, விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பூர் ஆகிய ஐந்து இடங்களில் இந்த அவசர பராமரிப்பு மற்றும் மீட்பு மையங்கள் செயல்பட உள்ளன. இந்த ஐந்து இடங்களிலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுவிட்டன. எனவே, அங்கு ஏற்கெனவே மாவட்ட மருத்துவமனைகள் செயல்பட்ட இடத்தில் இந்த மையங்கள் அமைய உள்ளன. இந்த மருத்துவமனையின் கட்டடங்களில் மனநலம் பாதிக்கப்பட்டோரை அனுமதித்து, பாதுகாப்பு அளித்து, சிகிச்சை அளிக்கத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 என்னென்ன சேவைகள்?: இந்த மையத்தில் 50 படுக்கை வசதிகள் இருக்கும். இதில் அனுமதிக்கப்படும் பெண்களுக்குத் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும். சிகிச்சையில் முன்னேற்றம் அடையும் நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தொழிற்பயிற்சி, சிகிச்சைக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு உள்ளிட்டவை அளிக்கப்படும்.
 இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண்களின் சிகிச்சைக்குத் தேவையான வசதிகள் அவர்களுக்கான உணவு, உடை என அனைத்தும் வழங்கப்படும். சிகிச்சைக்குப் பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் பட்சத்தில், குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும் வழிவகை செய்யப்படும். ஒவ்வொரு மையத்திலும் 3 எம்.பி.பி.எஸ். மருத்துவர்கள், ஒரு உளவியல் நிபுணர், 15 செவிலியர்கள், 2 பாதுகாவலர்கள் உள்பட 30 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். மாவட்ட மனநலத் திட்ட அலுவலர் மற்றும்
 மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் இந்த மையம் செயல்படும்.
 செயல்பாடு எவ்வாறு?: முதலில் தெருக்களில் சுற்றித் திரியும் ஆதரவற்ற பெண்களை மீட்புக்குழுவினர் கண்டறிவர். பின்னர் அவர்களை மீட்டு தேசிய மனநலச் சட்டத்தின்படி, நீதிமன்ற நடுவர் முன்பு ஆஜர் படுத்துவர். நீதிபதி மனநலம் பாதிக்கப்பட்டோரின் நிலையைக் கருத்தில் கொண்டு, அவரை காப்பகத்தில் எடுத்து சிகிச்சை மற்றும் பராமரிப்பு அளிக்க உத்தரவிடுவார். அந்த உத்தரவின் பேரிலேயே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ஆதரவு மையங்களில் அனுமதிக்கப்படுவர்.
 மத்திய - மாநில அரசுகள் பங்களிப்பு: இந்தத் திட்டமானது ரூ.1.085 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. மத்திய அரசு 60 சதவீதம், மாநில அரசு 40 சதவீதம் என்ற விகிதத்தில் நிதி பங்களிப்பு அளிக்கப்படும்.
 இதுதொடர்பாக தேசிய சுகாதாரத் திட்டத்தின் உயர் அதிகாரி கூறியது: 2018-2019-ஆம் நிதியாண்டுக்குள் 5 மையங்களும் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இந்த ஐந்து மையங்களும் செயல்படத்
 தொடங்கிய பின்பு, அண்மையில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்ட புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய இடங்களில் உள்ள மாவட்ட மருத்துவமனைகளிலும், இந்த மையங்கள் தொடங்குவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்படும். முன்னுரிமை அடிப்படையில் முதலில் பெண்களுக்கு மட்டும் இந்த மையங்கள் தொடங்கப்பட உள்ளன.
 இந்தத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்போது ஆண்களுக்கும் இதுபோன்ற ஆதரவு மையங்கள் தொடங்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.
 அரசின் உத்தரவு கிடைக்குமா?
 மனநலம் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கான இந்த மையங்களுக்கான அனைத்துப் பணிகளும் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மையங்களுக்கான ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட நிர்வாகப் பணிகள் நிலுவையில் உள்ளன. எனவே, சுகாதாரத் துறையானது நிர்வாகப் பணிகளை முடிக்கும் பட்சத்தில், மையங்களைத் தொடங்குவதற்கான தமிழக அரசின் அனுமதி கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com