மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது

எந்தக் காலத்திலும் மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது

எந்தக் காலத்திலும் மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
 தஞ்சாவூரில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: குடியரசுத் தலைவர் தேர்தலின்போது மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, பெங்களூரு சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்தார். அப்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பிரதமர் கேட்டதாகக் கூறினார். அதன்படி ஆதரவு அளிக்கப்பட்டது.
 குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலின்போது எங்களிடம் ஆதரவு கேட்கவில்லை. அதனால் நாங்களும் ஆதரவு அளிக்கவில்லை. இனிமேல் அவர்கள் கேட்க வேண்டிய அவசியம் வராது. நாங்களும் ஆதரவு கொடுக்க மாட்டோம். எந்தக் காலத்திலும் மதவாத சக்திகளுடன் நாங்கள் கூட்டணி வைப்பது கிடையாது.
 மாநிலங்களுக்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளது. கர்நாடகத்துக்கு 40 சதவீத நிதி குறைக்கப்பட்டுள்ளது. அதை எதிர்த்துப் போராட வேண்டும் என கர்நாடக முதல்வர் கூறியுள்ளார். தமிழகத்துக்கு 90 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து தமிழக முதல்வர் வாயைத் திறக்கவில்லை.
 தமிழகம் முன்னேறிய காரணத்துக்காக மத்திய அரசு நிதியைக் குறைத்துள்ளது. ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில்தான் தமிழகம் வளர்ச்சி அடைந்தது. குறிப்பாக, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சியில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாகத் தமிழகம் உயர்ந்தது. திராவிட ஆட்சியில்தான் தனிமனித வருமானம் அதிகரித்தது. இந்நிலையில், திராவிட ஆட்சியில் வளர்ச்சியில்லை எனக் கூறுகின்றனர்.
 எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் ஓராண்டு சாதனை விழா அல்ல, அது சோதனை விழா. இந்த ஆட்சியின் மூலம் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களும்தான் பயனடைகின்றனர். ஏழை மக்களுக்குப் பயன் கிடையாது.
 கர்நாடகத்தில் தேர்தல் நடைபெறும் வரை காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கப்போவது இல்லை. காலம் தாழ்த்தும் நடவடிக்கையை மத்திய அரசு செய்து வருகிறது. உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி மாதம் தீர்ப்பு வந்தபோது, அது பற்றி குழப்பமாக கர்நாடகம் கருத்துத் தெரிவித்தது.
 மத்திய அரசு வழக்குரைஞரும் அவ்வாறே கூறினார். உடனே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று விளக்கம் கேட்டிருக்க வேண்டும். மறு ஆய்வு மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யவில்லை.
 காவிரி நீரைத் தேக்கி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை பெய்யாததாலும், காவிரி நீர் வராததாலும் பயிர்கள் கருகி விட்டன. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி நாங்கள் நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கின்றனர்.
 இப்போராட்டத்துக்குப் பிறகு அடுத்தகட்டப் போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும் என்றார் தினகரன்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com