உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள செயல்திட்டம் என்பதே மேலாண்மை வாரியம் தான்: தீர்ப்பின் முழு விவரம்

காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. ஆக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள செயல்திட்டம் என்பதே மேலாண்மை வாரியம் தான்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள செயல்திட்டம் என்பதே மேலாண்மை வாரியம் தான்: தீர்ப்பின் முழு விவரம்

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாக இருக்கிறதே? செயல்படுத்துவதில் மத்திய - மாநில அரசுகளுக்கு என்ன பிரச்னை…


காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. அதில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில விஷயங்களில் திருத்தங்களைச் செய்துள்ளது. தமிழகத்துக்கு வழங்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது. பெங்களூரு மாநகர குடிநீர்த் தேவைக்காக கூடுதலாக நீர் ஒதுக்கீடு போன்றவை அவற்றில் சில.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில், தமிழகம் எதிர்பார்த்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது குறித்த எந்தத் தெளிவான குறிப்பும் இல்லை என்று தமிழக அரசும், விவசாயிகளும், சில அரசியல் கட்சிகளும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், காவிரி விவகாரம் குறித்து தாங்கள் கொடுத்த தீர்ப்பை ஆறு வார காலத்துக்குள் அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. அந்த ஆறு வார கால அவகாசம் கடந்த மார்ச் 29-ம் தேதியுடன் முடிந்தது.

இதையடுத்து, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளது. இதுகுறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள புதுச்சேரி அரசும் முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதே நேரத்தில், காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட கேரள அரசும், கர்நாடக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எந்த இடத்திலும் காவிரி மேலாண்மை வாரியம் (Cauvery Management Board) என்று குறிப்பிடப்படவில்லை, செயல்திட்டம் (Scheme) என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய அரசும், தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசும், அமைச்சர்களும், எதிர்க்கட்சிகளும்தான் இந்த விவகாரத்தில் தவறான கருத்துகளை மக்களிடையே பரப்பி வருவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை தெளிவாகப் பார்த்தால், அதில் காவிரி மேலாண்மை வாரியம் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்பது தெரிய வரும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் பக்கம் 335 முதல் 337-ம் பக்கம் (பத்தி 290) வரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, மத்திய அரசும், பாஜகவினரும் குறிப்பிடும் செயல்திட்டம் என்பதே காவிரி மேலாண்மை வாரியம்தான் என்பது தெளிவாக விளங்கும்.


தீர்ப்பு விவரம்

2007, பிப்ரவரி 5-ம் தேதி வழங்கப்பட்ட காவிரி தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புக்குப் பிறகு, கர்நாடகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CIVIL APPEAL NO. 2453 OF 2007, கேரளா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CIVIL APPEAL NO. 2454 of 2007, தமிழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CIVIL APPEAL NO. 2456 OF 2007 ஆகிய வழக்குகளில், இந்த ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவ ராய், கான்வில்கர் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

அந்தத் தீர்ப்பில், 

Q. Mechanism (Cauvery Management Board) for implementation of Tribunal's decisions - (தீர்ப்பாயத்தின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறை (காவிரி மேலாண்மை வாரியம்)
290. தீர்ப்பாயம் அதன் இறுதி முடிவுகளை/கட்டளைகளைச் செயல்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்யும்போது, 27.08.1980 தேதி முதல் செயல்பாட்டில் உள்ள 45-ஆம் சட்டத்தின் 1956 சட்டத்தில் (மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் தகராறுகள் சட்டம், 1956) பிரிவு 6A-ஐ கவனத்தில் எடுத்துக்கொண்டது. இதில், செயல் திட்டங்களை (Schemes) உருவாக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் குறிப்பு, சட்டப் பிரிவு 6-ல் செய்த சட்டத் திருத்தத்துக்குப் பின், பிரிவு 6 (2)-ன்படி, தீர்ப்பாயத்தின் தீர்ப்பு அதிகாரபூர்வமான அரசிதழில் பிரசுரிக்கப்பட்ட பின்னர், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு அல்லது ஆணைக்கு இணையானது.

இந்தச் சட்டபூர்வ பின்னணியில், தீர்ப்பாயம் அதன் முடிவை செயல்படுத்துவதற்கான ஒரு செயல் திட்டத்தை அமைப்பதற்கான எந்த நெறிமுறையும் (direction), ஒரு அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில்தான் இருந்தது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் தகராறுகள் (திருத்த) சட்டம் 1980, அதன் பார்வையில் செயல்திட்டம் அமைப்பது எப்படி, அதன் செயல்பாடுகள் என்ன என்பது போன்ற விவரங்கள் வழங்கப்படவில்லை. எனினும், தனது முடிவை அமல்படுத்துவதிலும், அது தொடர்பான பரிந்துரைகளை வழங்குவதற்கும் மறைமுகமான அதிகாரம் அதற்கு இருந்தது.

எனவே, பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தைப்போல் (Bhakra Beas Management Board), காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. தவிர மேலும் சில முக்கியக் குறிப்புகளையும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

  • ஒரு சரியான வழிமுறை அமைக்கப்படாவிட்டால், தீர்ப்பை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பை பாதுகாக்க முடியாது.
  • காவிரி மேலாண்மை வாரியம், அதன் அமைப்பு, அதன் செயல்பாடுகள் போன்றவை குறித்து தீர்ப்பாயம் ஏற்கெனவே பரிந்துரைத்துள்ளது.
  • காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு (Cauvery Water Regulatory Committee) அமைத்து, அதன் செயல்பாடுகள் நெறிமுறைப்படுத்தப்பட வேண்டும்.
  • காவிரி மேலாண்மை வாரியம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30-ம் தேதிக்கு முன் நான்கு மாநிலங்களுக்கும் ஆண்டு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும்.

என்று குறிப்பிட்ட நீதிமன்ற அமர்வு, காவிரி மேலாண்மை வாரியம் ஒதுக்கும் நீர்ப்பங்குகளை செயல்படுத்த தீர்ப்பாயம் சில வழிமுறைகளைப் பரிந்துரைத்துள்ளது. 1956 சட்டத்தின் 6.1 பிரிவின் கீழ் திட்டமிடப்பட்ட திட்டத்தின் கருத்தை பகுப்பாய்வு செய்வதன் மூலம் பல அம்சங்களை கூறவேண்டி இருப்பதால், தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட வழிமுறைகளை இத்தீர்ப்பில் மீண்டும் குறிப்பிடவில்லை என்று சொல்லியிருக்கிறது.

மேலும், தீர்ப்பின் பத்தி 403, பக்கம் 457-ல், ‘தீர்ப்பாயத்தால் கூறப்பட்ட திட்டத்தை பிப்ரவரி 16, 2018-ல் இருந்து ஆறு வாரங்களுக்குள் செயல்படுத்த வேண்டும் என்று அந்த அமர்வு அறிவுறுத்தியுள்ளது.

ஆக, உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் உள்ள செயல்திட்டம் என்பதே மேலாண்மை வாரியம்தான் என்பது தெளிவாகிறது. மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பில் தமிழகத்துக்கு உறுதிப்படுத்தப்பட்ட தண்ணீரில் 14.75 டிஎம்சி தண்ணீரை குறைத்ததைத் தவிர, தீர்ப்பாயத்தின் அனைத்து உத்தரவுகளையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. 

ஆனால், தீர்ப்பில் செயல்திட்டம் என்று குறிப்பிட்டிருப்பது புரியவில்லை என்று மத்திய அரசும், மத்திய அமைச்சர்களும், பாஜகவினரும் சொல்வதும், மேலும் மூன்று மாத கால அவகாசம் வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளதும், காலதாமதம் மற்றும் தீர்ப்பை செயல்படுத்தக்கூடாது என்ற எண்ணத்தில்தானே தவிர வேறு இல்லை.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதற்கும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சொன்ன பிறகும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்துவதில் மத்திய அரசு சுணக்கம் காட்டுவது கண்டனத்துக்குரியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com