காவிரி பிரச்னையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக மேற்கொள்ளும்: முதல்வர் 

காவிரி பிரச்னையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்னையில் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உறுதியாக மேற்கொள்ளும்: முதல்வர் 

சென்னை: காவிரி பிரச்னையில் அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

காவிரி பிரச்னை தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 

காவேரி நடுவர் மன்றம் 5.2.2007 அன்று அதன்  இறுதி ஆணையை பிறப்பித்தது. இந்த இறுதி ஆணை வெளியிட்ட பின்னர், நான்கு ஆண்டு காலம் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்த தி.மு.க. அரசு, காவேரி நடுவர் மன்ற  இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

காவேரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.  அந்தக் கூட்டத்தில், காவேரி நடுவர் மன்றத்தில் தமிழகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கறவு செய்து சாதகமான தீர்ப்பினை பெறுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் நலன் கருதி, மேற்படி நதிநீர் பங்கீடு தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசு, மத்திய அரசிதழில் வெளி வரச் செய்து, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு  ஆகியவற்றை எவ்வித காலதாமதமும் இன்றி நடைமுறைப்படுத்த மனப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை எதிர்த்து, கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன.  தமிழ்நாடு அரசும் ஒருசில பாதகமான அம்சங்களை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிவில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது.

இந்த சிவில் மேல் முறையீட்டு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோதிலும், மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 2011-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டதால், உச்ச நீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் திறம்பட வாதிட்டதன் பயனாக, காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையினை 20.2.2013-க்குள் மத்திய அரசிதழில் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, 19.2.2013 தேதியிட்ட மத்திய அரசிதழில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை, மத்திய அரசிதழில் வெளியிடப்பட்ட உடன், 20.2.2013 அன்று மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்று அறிவித்தார்கள். தமிழகத்திற்கு கிடைத்த இந்த வெற்றியை, எதிர்க்கட்சி நண்பர்கள், நடுநிலையாளர்கள், விவசாய பெருங்குடி மக்கள் அனைவரும் மனமுவந்து பாராட்டினர் என மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் 9.3.2013 அன்று தஞ்சாவூரில் நடைபெற்ற பாராட்டு விழாவில் தெரிவித்தார்கள்.

இதனைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த சிவில் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரிக்கப்பட்டு,  16.2.2018 அன்று இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது.  இந்தத் தீர்ப்பில், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் எனவும், காலக்கெடு ஏதும் நீட்டிக்கப்பட மாட்டாது எனவும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டிற்கு 177.75 டி.எம்.சி. அடி நீர் வழங்கப்பட வேண்டும் என்பதை தவிர, காவேரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதி ஆணையில் வேறு எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை.

உச்ச நீதிமன்றத்தின் 16.2.2018 நாளிட்ட தீர்ப்பின்மீது, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கூட்டம் 22.2.2018 அன்று நடத்தப்பட்டது. அக்கூட்டத்தில், அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்ச நீதிமன்ற ஆணையின்படி மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு, காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணையில் வழங்கிய நீரில், 14.75 டிஎம்சி அடி நீரை குறைத்தும், கர்நாடகத்திற்கு கூடுதலாக வழங்கியும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது குறித்து அனைத்துக் கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தீர்மானங்கள் இயற்றப்பட்டன.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் சென்னைக்கு 24.2.2018 அன்று வருகை தந்தபோது, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க, என்னால் நேரடியாக வலியுறுத்தப்பட்டது.  மேலும், 25.2.2018 அன்று மாண்புமிகு மத்திய நீர்வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்புத் துறையின் அமைச்சர்

திரு. நிதின் கட்கரி அவர்கள் சென்னை வந்தபோது, இதனையே நேரில் வலியுறுத்தி நான் கடிதம் அளித்தேன்.  இதுதவிர, அனைத்துக் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் இக்கோரிக்கையை வலியுறுத்த நேரம் கேட்டு கடிதமும் நான் அனுப்பியிருந்தேன்.

மத்திய நீர்வள அமைச்சகத்தால் 9.3.2018 அன்று புது டில்லியில் நடத்தப்பட்ட கூட்டத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் கலந்து கொண்ட தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவேரி நடுவர் மன்றத்தின் இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ளவாறு, காவேரி நடுவர் மன்ற ஆணைகளை திறம்பட செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரங்களையும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தி எடுத்துரைக்கப்பட்டது.  இவ்விரு அமைப்புகளை மத்திய அரசு அமைப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளரிடமிருந்து 13.3.2018, 21.3.2018 மற்றும் 23.3.2018 ஆகிய நாட்களில் மத்திய நீர்வள அமைச்சகத்திற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படியும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படியும், காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை திறம்பட செயல்படுத்துவதற்கு அனைத்து அதிகாரங்களும் கொண்ட காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உச்ச நீதிமன்றத்  தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள 6 வார காலத்திற்குள் மத்திய அரசு அமைத்து அவற்றை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்ற தீர்மானம், 15.3.2018 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.  இந்தத் தீர்மானத்தை அன்றைய தினமே நான் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் உடனடி நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தேன்.

மேலும், 22.2.2018 அன்று அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து, தமிழ்நாடு அரசின் உயர் அதிகாரிகள் 27.3.2018 அன்று புது டில்லியில்,  தமிழ்நாட்டின் சார்பில் காவேரி பிரச்சனை குறித்த வழக்குகளில் வாதிட்ட மூத்த வழக்கறிஞரான திரு. சேகர் நாப்டே உட்பட அனைத்து வழக்கறிஞர்களுடன் கலந்து ஆலோசித்ததன் அடிப்படையில், உச்ச நீதிமன்றம் அளித்துள்ள ஆறு வார காலம் வரை காத்திருந்து, பின்னர் தகுந்த மேல் நடவடிக்கை எடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்கும் வகையில், கடந்த 17 நாட்களாக அஇஅதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இப்பிரச்சனையினை நாடாளுமன்றத்தில் எழுப்பியதன் விளைவாக, நாடாளுமன்றம் நடைபெறாமல் முடங்கியது.  இருப்பினும், மத்திய அரசு இதுவரையில் காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தவில்லை.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த காலக்கெடு முடிவுறும் தருவாயில் இருந்த நிலையில் 29.3.2018 அன்று நான் மூத்த அமைச்சர்கள், தமிழ்நாடு அரசு மாநில தலைமை வழக்குரைஞர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் ஆகியோருடன் தமிழ்நாட்டின் சார்பில் எடுக்கப்பட வேண்டிய மேல் நடவடிக்கை குறித்து விரிவாக விவாதித்தேன். அக்கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் கால கெடுவுக்குள் மத்திய அரசு காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்கா விட்டால், தமிழ்நாடு அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.  இந்தக் காலக் கெடு முடிவடைந்த நிலையிலும், மத்திய அரசு இவ்விரு அமைப்புகளையும் அமைக்காத நிலையிலும், 31.3.2018 அன்று இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மத்திய அரசின் மீது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு முன் 2.4.2018 அன்று உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்த தமிழ்நாட்டின் சார்பில் வாதிட்டு வரும் வழக்குரைஞர்களுக்கு உரிய அறிவுரைகளை நான் வழங்கியுள்ளேன்.

உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஆறு வாரக் காலக் கெடு முடிந்தவுடன், இன்றைய தினம் (31.3.2018) மூன்று மாத காலம் அவகாசம் கேட்டும், ‘திட்டம்’ என்பது காவேரி மேலாண்மை வாரியமா அல்லது மத்திய அரசு எந்த ஒரு திட்டத்தை அமைக்கலாமா என்பன குறித்த விளக்கங்கள் கோரி, தமிழ்நாடு தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு பின்னர், ஒரு மனுவினை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று தீர்ப்பு வழங்கிய பின்னர் உடனடியாக மத்திய அரசு விளக்கங்களை கோரியிருக்கலாம். மத்திய அரசின் இந்த மனுவானது, காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை காவேரி நடுவர் மன்றமும், உச்ச நீதிமன்றமும் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு முரணானதாகும். 

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்போது, தமிழ்நாட்டின் சார்பில் வாதிட்டு வரும் மூத்த வழக்கறிஞர்கள், அனுமதிக்கப்படும் நிலையிலேயே இந்த மனுவினை நிராகரிக்கும் வகையில் வாதிடுமாறும், காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் காவேரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய அமைப்புகளை உடனடியாக அமைக்க தெளிவான உத்தரவினை மத்திய அரசுக்கு வழங்க வேண்டிய வகையிலும் உறுதிபட வாதங்களை எடுத்துரைக்குமாறு வழக்குரைஞர்களுக்கு  நான் அறிவுறித்தியுள்ளேன்.

தமிழ்நாட்டின் ஜீவாதார பிரச்சனையான காவேரி  பிரச்சனையில், நமது உரிமைகளை நிலைநாட்டவும், விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மாண்புமிகு அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் உறுதியாக தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com