நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதில்: நடிகர் விஷால் ஆவேசம் 

அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் பதில்: நடிகர் விஷால் ஆவேசம் 

சென்னை: அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் ஞாயிறன்று நடைபெற்றது.இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் பலருக்கு அண்டை மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது.  அந்த வகையில் தமிழகத்தின் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவரின் மகன் கஸ்தூரி மகாலிங்கத்துக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

இதன்படி, கிருஷ்ணசாமி தனது மகன் கஸ்தூரி மகாலிங்கத்துடன் எர்ணாகுளம் சென்றார். மகனைத் தேர்வு எழுத தேர்வு மையத்திற்குள் அனுப்பி விட்டு விடுதியில் காத்திருந்தபோது கிருஷ்ணசாமி 'திடீர்' மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகனை தேர்வு எழுத அழைத்துச் சென்ற இடத்தில் தந்தை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் உயிரிழந்தது தெரியாமல் மாணவர் தேர்வு எழுதினார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்று நீட் தேர்வு எழுதும் அனைத்து மாணவ மாணவியருக்கும் எனது வாழ்த்துகள். கடும் மன உளைச்சலுக்கும் அலைக்கழிப்புக்கும் இடையிலும் கூட தங்கள் மருத்துவக் கனவுக்காக என் தம்பி, தங்கைகள் இந்தத் தேர்வை எழுதியிருக்கிறார்கள். நீட் தேர்வுக்காக கேரளா சென்று அங்கேயே தந்தை கிருஷ்ணசாமியை பறி கொடுத்த மாணவன் கஸ்தூரி மகாலிங்கத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்.

இந்த இழப்பு ஈடு செய்ய முடியாதது. அவரை ஒரு மருத்துவராக்கி கிருஷ்ணசாமியின் கனவை நிறைவேற்றுவது நம் கடமை. கஸ்தூரி மகாலிங்கத்துக்கு அதற்கான உதவிகளை செய்யத் தயார். அனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான நீட் பலிகளுக்கு மக்கள் எதிர்காலத்தில் நிச்சயம் பதில் கொடுப்பார்கள்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com