பி.இ. மாணவர் சேர்க்கை கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ஏன் ரொக்கமாகப் பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பி.இ. மாணவர் சேர்க்கை கட்டணத்தை ரொக்கமாக ஏன் பெறக் கூடாது?: உயர் நீதிமன்றம் கேள்வி

பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ஏன் ரொக்கமாகப் பெறக்கூடாது என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ. எழிலரசன் மற்றும் வழக்குரைஞர் பொன்.பாண்டியன் தனித்தனியாகத் தாக்கல் செய்த மனுவில், பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரியிருந்தனர். 
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மனு தொடர்பாகப் பதிலளிக்க அண்ணா பல்கலைகழகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என கடந்த ஆண்டே அறிவித்து விட்டோம். ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கலந்தாய்வில் பங்கேற்பதில் எந்த பாதிப்பும் இல்லை. விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்யும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாற்று நடவடிக்கையாக விண்ணப்பத் தொகையை வரைவோலையாகச் செலுத்த அனுமதிக்கலாமா என்பது குறித்தும் தமிழில் விண்ணப்பிக்க அனுமதி அளிப்பது தொடர்பாகப் பரிசீலித்தும் இறுதி முடிவைத் தெரிவிக்க உத்தரவிட்டிருந்தது.
மீண்டும் விசாரணை: இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழக தரப்பில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 உதவி மையங்களில் தலா 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கிராமப்புற மாணவர்களுக்கு உதவி செய்கின்றனர். சேர்க்கைக் கட்டணத்தை கடன் அட்டை, வரவு அட்டை மற்றும் இணைய வழி வங்கிச் சேவையின் மூலம் மட்டுமே செலுத்த முடியும். வரைவோலை மூலம் பணம் பெறுவதில் தொழில்நுட்பச் சிக்கல் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மாணவர்களுக்கு சிரமம் ஏற்படக்கூடாது என்பதால்தான் மாற்றுக் கருத்துகளை நாங்கள் தெரிவித்தோம். விண்ணப்பதாரர்களிடம் இருந்து மாணவர் சேர்க்கைக் கட்டணத்தை ஏன் ரொக்கமாகப் பெறக்கூடாது எனக் கேள்வி எழுப்பி, இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெள்ளிக்கிழமை (மே 11) பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com