கோடை விடுமுறையில் பள்ளி பராமரிப்புப் பணி: மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் உத்தரவு

கோடை விடுமுறையின் போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதன் கட்டடங்களைப் பராமரிப்பதுடன், மாணவர்களுக்கான பாதுகாப்புப் பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும்

கோடை விடுமுறையின் போது மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அதன் கட்டடங்களைப் பராமரிப்பதுடன், மாணவர்களுக்கான பாதுகாப்புப் பணிகளையும் முறையாக மேற்கொள்ள வேண்டும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 
இது குறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:-
தமிழகம் முழுவதும் உள்ள மெட்ரிகுலேஷன் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திறக்கும்போது பள்ளிக் கட்டடம் முழுமையான கட்டமைப்பு வசதியுடனும், உயர்தர சுகாதார பொலிவுடனும் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான உரிய அறிவுறுத்தல்களை மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் ஆய்வாளர்கள் (ஐஎம்எஸ்) வழங்க வேண்டும். 
கழிவறைகள்- குடிநீர்த் தொட்டிகள்: பள்ளிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளைச் சுத்தம் செய்து கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாணவர்களின் எண்ணிக்கைக்குத் தக்கவாறு குடிநீர் குழாய், கழிவறைகள், சிறுநீர் கழிப்பறைகளை அமைப்பது அவசியம். மாணவர்கள் கைகழுவும் குழாய்கள் போதுமான எண்ணிக்கையிலும், இடவசதியுடன், போதுமான உயரத்தில் அமைக்க வேண்டும். 
பாதுகாப்பு நடவடிக்கைகள்: பள்ளி வளாகத்தில் புதர்கள், கற்குவியல்கள், கழிவுப் பொருள்களின் குவியல்கள் இல்லாதவாறு தூய்மை செய்யப்பட வேண்டும். பள்ளி வளாகத்தில் பள்ளம் ஏதேனும் இருந்தால் அவற்றை மூடிச் சரிசெய்தல் வேண்டும். கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, கழிவு நீர்த் தொட்டி ஆகியவை முறையாக மூடப்பட்டு, அதனைப் பூட்டியிருக்க வேண்டும். 
பள்ளியில் உள்ள மின் இணைப்புகளைப் பராமரித்து அவற்றை மாணவர்கள் அணுகாதவாறு பாதுகாப்பான முறையில் மூடிவைக்க வேண்டும். வகுப்பறைகளில் பழுதடைந்த நிலையில் மின்விசிறி, டியூப்லைட் ஆகியவை இருப்பின் அவற்றை மாற்றி புதியவற்றைப் பொருத்த வேண்டும். பள்ளியில் உள்ள தீயணைப்பான் சாதனங்களைச் சோதனை செய்து காலாவதியாகியிருந்தால் உடனடியாகப் புதுப்பிப்பது அவசியம். 
வாகனங்களுக்குத் தரச்சான்று: பள்ளிக் கட்டடங்களின் மேற்கூரைகளில் எந்தவிதமான பழுதும் இருக்கக் கூடாது. வகுப்பறைகளில் மாணவர்களுக்கு போதுமான இருக்கை வசதி செய்யப்பட வேண்டும். 
மேலும் பள்ளிக்கு பேருந்துகளில் அழைத்து வரும் மாணவர்களின் பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானதாகும். 
எனவே கோடை விடுமுறையில் போக்குவரத்துத் துறையால் மேற்கொள்ளப்படும் ஆய்வில் அனைத்துப் பள்ளி வாகனங்களையும் முன்னிலைப்படுத்தித் தரச்சான்று பெறப்பட வேண்டும். அவ்வாறு தரச்சான்று பெறாத வாகனங்களை இயக்கக் கூடாது என அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com