மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே காவிரி வரைவுத் திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

தற்பொழுதும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே காவிரி வரைவுத் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம்.
மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே காவிரி வரைவுத் திட்டம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் 

சென்னை: தற்பொழுதும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே காவிரி வரைவுத் திட்டம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

பலமுறை வாய்தாக்கள் வாங்கி இழுத்தடித்த பின்னர் இன்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. ஏற்கனவே கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் உட்பட அமைச்சர்கள் ஈடுபட்டுள்ள காரணத்தால் வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் பெற முடியவில்லை என இரண்டு முறை நீதிமன்றத்தில் அவகாசம் கேட்டு மத்திய அரசு காலங்கடத்தியது. கர்நாடக தேர்தல் முடிவுற்ற பின்னர் இப்போதும் மத்திய அமைச்சரவை கூடி வரைவுத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியதாக செய்திகள் இல்லை. மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே தற்போது வரைவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதிலிருந்து உண்மைக்கு மாறான காரணங்களைச் சொல்லியே மத்திய அரசு காவிரி பிரச்சனையை இழுத்தடித்துள்ளது என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

உச்சநீதிமன்றம் தீர்மானித்திருந்த காலக்கெடுவிற்குள் (மார்ச் 29) வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்தால் இந்நேரம் இவ்வழக்கு இறுதியாக முடிவுபெற்று காவிரி பிரச்சனையில் ஒரு தீர்வு ஏற்பட்டிருக்கக் கூடும். ஆனால் மத்திய அரசு கர்நாடகத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களை மனதில் கொண்டு இழுத்தடித்து இப்போது நீதிமன்றம் கோடை விடுமுறைக்கு செல்லவிருக்கிற நிலையில் வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளதானது மீண்டும் காலத்தை இழுத்தடிப்பதற்கே வழிவகுக்கும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரைவுத் திட்டத்தில் அமைக்கப்படவுள்ள வாரியத்திற்கு எந்த வகையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது முழுமையாகத் தெரியவில்லை. நடுவர் மன்றம் சுட்டிக்காட்டியிருந்ததைப் போல கர்நாடகத்தில் உள்ள நீர் நிலைகளை இயக்குகிற அளவுக்கான அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். இத்தகைய அதிகாரங்களைக் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு தமிழகம் குரல் கொடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

மேலும் தற்போது மத்திய அரசு அளித்துள்ள வரைவுத் திட்டம் சம்பந்தமாக, ஒத்தக்கருத்தினை உருவாக்க, தமிழக நலனை அழுத்தமாக முன்னெடுக்க அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டுமென தமிழக முதல்வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com