டெல்டா, வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதக் குறைவு பற்றி ஆய்வு தேவை! அன்புமணி ராமதாஸ்

டெல்டா, வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதக் குறைவு பற்றி ஆய்வு தேவை! அன்புமணி ராமதாஸ்

டெல்டா, வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதக் குறைவு பற்றி ஆய்வு தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

டெல்டா, வட மாவட்டங்களில் தேர்ச்சி விகிதக் குறைவு பற்றி ஆய்வு தேவை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,

தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவியருக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் தேர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்திருப்பது பெரும் கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பகுப்பாய்வு செய்து பார்த்தால் மகிழ்ச்சியடைவதற்கு எதுவுமில்லை. உதாரணமாக தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 6754 மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1907 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இது 28.23 விழுக்காடு ஆகும். இது மிகவும் கவுரவமான ஒன்றாகும். ஆனால், தமிழகத்திலுள்ள 2574 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 238 பள்ளிகள் மட்டும் தான் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. இது வெறும் 9.24% மட்டுமே. 25% அரசு பள்ளிகளால் கூட முழுத் தேர்ச்சி பெற முடியவில்லை என்பது பள்ளிக்கல்வித்துறை வெட்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

அதேபோல், தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை விருதுநகர் மாவட்டம் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், கடைசி இடம் வழக்கம் போல வட மாவட்டங்களுக்குரிய ஒன்றாக மாறியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் 83.35% தேர்ச்சியுடன் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த மாவட்டத்தின் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டின் அளவைவிட 03.01% குறைந்திருக்கிறது.

அதுமட்டுமின்றி மாநில அளவில் கடைசி 10 இடங்களை, அதாவது முறையே 23 முதல் 32 ஆவது இடம் வரை பிடித்துள்ள திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர், கடலூர், நாகை, திருவாரூர், அரியலூர், விழுப்புரம் ஆகியவை வட தமிழகத்தையும், காவிரி பாசனப் பகுதியையும் சேர்ந்தவை ஆகும். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடிக்கிறது. வட தமிழக மாவட்டங்களிலும், காவிரி பாசன மாவட்டங்களிலும் கல்வித் தரத்தை உயர்த்த சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் கண்டுகொள்வதில்லை.

இதேநிலை நீடித்தால் வடமாவட்டங்கள் கல்வியில் மேலும் பின்தங்கிவிடும் ஆபத்து உள்ளது. எனவே, அரசு பள்ளிகள் மற்றும் வடமாவட்டங்களில் தேர்ச்சி விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதற்கான காரணங்களை ஆராய்ந்து, அவற்றை சரி செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக தமிழகத்தின் முன்னணி கல்வியாளர்களைக் கொண்டு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com