பாலகுமாரன் மறைவு: முதல்வர் பழனிசாமி இரங்கல்

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: புகழ் பெற்ற எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வருத்தம் அடைந்தேன். எழுத்துச் சித்தர் என்று போற்றப்படும் பாலகுமாரன், நூற்றுக்கணக்கான சிறுதைகள், 200-க்கும் அதிகமான நாவல்களையும், கவிதைகள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பாலகுமாரன் எழுதிய மெர்க்குரி பூக்கள், இரும்பு குதிரைகள் ஆகிய நாவல்கள் மிகவும் பிரபலமானவை. அவர் சில தமிழ்த் திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனங்களையும் எழுதியுள்ளார்.
கடந்த ஜனவரியில் நடைபெற்ற அரசு விழாவில் பாலகுமாரனுக்கு தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது வழங்கியது இன்றும் பசுமையாய் நினைவில் இருக்கிறது. கலைமாமணி விருது, இலக்கியச் சிந்தனை விருது போன்ற பல விருதுகளையும் பெற்றவர். அனைவரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர். இலக்கியத் துறையில் தனக்கென தனி முத்திரை பதித்த அவரது மறைவு தமிழ் இலக்கியத் துறைக்கு பேரிழப்பு.

தலைவர்கள் இரங்கல்

எழுத்தாளர் பாலகுமாரன் மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், திரையுலகப் பிரபலங்கள், எழுத்தாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மு.க.ஸ்டாலின் (திமுக): கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் எனப் பல்வேறு படைப்புகளை உருவாக்கி, சிறந்த எழுத்தாளராக விளங்கிய பாலகுமாரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அவரின் மறைவு இலக்கிய உலகத்துக்குப் பேரிழப்பு. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், வாசகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். 
சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): சமூகம், ஆன்மிகம், சரித்திரம் எனப் பல்வேறு துறைகளில் தன் ஒப்பற்ற எழுத்தாற்றலால் புகழ்க் கொடி நாட்டியவர். கதை, நாவல்கள் படிக்கும் ஒவ்வொருவர் இல்லங்களிலும் பாலகுமாரனின் புத்தகம் இல்லாமல் இருக்காது. அவரின் மறைவு தமிழுலகத்துக்கு மிகப்பெரிய இழப்பு.
வைகோ (மதிமுக): பாலகுமாரனின் எழுத்து ஓவியங்களான இரும்புக் குதிரைகள், மெர்க்குரிப் பூக்கள், சுகஜீவனம் போன்ற படைப்புகள் நெஞ்சை விட்டு நீங்காதவை. எழுத்து ஆளுமையும், லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயத்தைத் தொட்ட படைப்பாளி எனும் கீர்த்தியும் பெற்றிருந்த பாலகுமாரனின் மறைவு தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. 
நடிகர் ரஜினிகாந்த்: சிறந்த எழுத்தாளர்; என் நெருங்கிய நண்பர். பாட்ஷா படத்துக்குப் பிறகு என்னுடைய பல திரைப்படங்களுக்கு வசனம் எழுத அவரை அழைத்தேன். தான் ஆன்மிகம் மற்றும் இலக்கியத் துறையில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறி அதனை மறுத்துவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
நடிகர் கமல்ஹாசன்: எழுத்தாளர் பாலகுமாரன் எனது நீண்டகால நண்பர். சிறந்த எழுத்தாளர். சினிமாவில் மட்டுமல்ல இலக்கியத்திலும் அவர் சிறந்தவர். நாங்கள் இருவரும் சேர்ந்தே சினிமாவுக்கு வசனம் எழுதி இருக்கிறோம். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. 
ஜி.கே.வாசன் (தமாகா): தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட பெருமைக்குரியவர். தனது படைப்புகளால், எழுத்துப் பாணியால் எழுத்துலகில் தனக்கென்று தனி முத்திரை பதித்து சாதனை படைத்தவர். பாலகுமாரனின் படைப்புகள் என்றென்றும் புகழோடு, சிறக்கும். எழுத்தாளராகவும், வழிகாட்டியாகவும் விளங்கிய போற்றுதலுக்குரியவர். 
டிடிவி தினகரன் (அமமுக): நூற்றுக்கணக்கான புத்தகங்களைப் படைத்து, நாவலாசிரியராக, திரைப்படங்களுக்குத் திரைக்கதை தீட்டியவராக, சமயம், சமூகம் என அனைத்திலும் தன் தனிச் சிறப்பை நிலைநாட்டி முத்திரை பதித்தவர். பாலகுமாரனின் மறைவு தமிழ் எழுத்துலகுக்கு பேரிழப்பு. 
எழுத்தாளர் ஜெயமோகன்: இரும்புக் குதிரைகள், கரையோர முதலைகள் என புகழ்மிக்க தொடர்கதைகள் வழியாக தமிழின் நட்சத்திரங்களில் ஒருவராக பாலகுமாரன் விளங்கினார். உரையாடலினூடாக கதைசொல்வதில் நிபுணர். வணிக எழுத்தின் வரையறைக்குள் அமைந்த அவருடைய படைப்புகளில் ஆண்-பெண் உறவு குறித்த எழுபது எண்பதுகளின் தயக்கங்களும் சஞ்சலங்களும் நுட்பமாகப் பதிவாகியிருக்கின்றன. 
கவிஞர் வைரமுத்து: பாலகுமாரனின் இழப்பு எழுத்துலகத்தின் மீது விழுந்த இடி. தொழில்நுட்பத்தின் வல்லாண்மையால் வாசிப்பை விட்டுத் தப்ப நினைத்த ஒரு தலைமுறையை "உட்கார்ந்து வாசி, பிறகு யோசி' என்று உலுக்கியவர்களில் பாலகுமாரனும் முக்கியமானவர். பாலகுமாரன் தன் படைப்புகளால் மரணத்தை வென்று நீண்ட காலம் தமிழோடு வாழ்ந்திருப்பார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com