எம்.பி.பி.எஸ்., ஆயுஷ்: பிளஸ் 2 மதிப்பெண் உதவாது

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் உதவாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.

எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மற்றும் ஆயுஷ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு பிளஸ் 2 மதிப்பெண் உதவாது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை மத்திய அரசு கடந்த ஆண்டு முதல் கட்டாயமாக்கியுள்ளது. நிகழாண்டில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், ஹோமியோபதி ஆகிய ஆயுஷ் படிப்புகளுக்கும் நீட் தேர்வை கட்டாயமாக்கியுள்ளது. நீட் தேர்வு மே 6-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. கட் - ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடைபெற்றபோது, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் முக்கியமாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தாலும் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு அது உதவாது. குறைந்தபட்ச மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
குறைந்தபட்ச மதிப்பெண் எவ்வளவு?: அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.) வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று, இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்கள் அனைத்தையும் சேர்த்து 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோர் 40 சதவீத மதிப்பெண்ணும், மாற்றுத்திறனாளிகள் 45 சதவீத மதிப்பெண்ணும் எடுத்தால் போதுமானது.
நீட் தேர்ச்சி மதிப்பெண்: நீட் தேர்வில் அனைத்துப் பிரிவினர் 50 சதமானம் ("பெர்சன்டைல்'), பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் 40 சதமானம், மாற்றுத்திறனாளிகள் 45 சதமானம் பெற்றால் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
எந்தப் படிப்புக்கு அவசியம்? தமிழகத்தில் கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடைபெறுகிறது. எனவே, பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று, நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்கள் கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம். அதே போன்று இளநிலை அறிவியல் படிப்புகளில் சேருவதற்கும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் அவசியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com