இரவுக் காவலர்கள் இல்லாத 25,000 கோயில்கள்

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் இரவுக் காவலர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.


இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாகத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் இரவுக் காவலர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், மொத்த பணியிடங்களில் 30 சதவீதத்துக்கும் மேல் காலியாக இருப்பதாகவும் ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் சென்னையில் சனிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர்.
இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அறநிலையத் துறை அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ், சுமார் 38 ஆயிரத்து 600 திருக்கோயில்கள் உள்ளன. அவற்றில், அதிக வருவாய் வரும் திருக்கோயில்கள் சுமார் 500 மட்டுமே ஆகும். வருவாய் ரூ.5,000-த்துக்கும் கீழ் உள்ள திருக்கோயில்கள் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன.
தனி நபர்களால் திருக்கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தனியார் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டு இருந்தது கண்டறியப்பட்டு சுமார் 5 ஆயிரத்து 550 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
பணியாளர்கள் இல்லாத நிலை: ஏராளமான கோயில்கள் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், தாங்கள் கடுமையான பணிச் சுமைகளுக்கு இடையே பணியாற்றி வருவதாக துறை ஊழியர்கள் தெரிவித்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத் துறை பணியிடங்களில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டே 38 ஆயிரத்து 600 திருக்கோயில்கள் நிர்வாகம் செய்யப்படுகிறது. திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், எழுத்தர்கள், கணக்கர்கள், அடிப்படை பணியாளர்கள் என பணிபுரியும் கோயில் பணியாளர்களின் நிலை மோசமாக உள்ளது. 
இரவுக் காவலர்கள் இல்லை: திருக்கோயில் சொத்துகள் அபகரிக்கப்பட்டும், தங்கள் குடும்பச் சொத்துகளாக மாற்றப்பட்டும் ஏகபோக அதிகாரத்தில் இருந்த வந்த திருக்கோயில் சொத்துகள் மீட்கப்பட்டன. திருக்கோயில்கள் பொதுவாக்கப்பட்டு, அதன் சொத்துகள் தனிநபர்களின் பிடியில் இருந்து மீட்டு பாதுகாக்கவே அறநிலையத் துறை ஏற்படுத்தப்பட்டது.
இந்தத் துறையின் நிர்வாகத்தில் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய கோயில்களுக்கு இரவுக் காவலர்கள் இல்லை. 200-க்கும் மேற்பட்ட திருக்கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இந்தக் கோயில்களில் தக்கார் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், திருக்கோயிலில் களவு, அசம்பாவித சம்பவங்கள் நடந்தால் இணை ஆணையாளர் முதல் செயல் அலுவலர், நிர்வாகி வரையில் அவர்களை விசாரணை நிலையிலேயே கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து கவனத்தை ஈர்க்க வரும் சனிக்கிழமையன்று இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளரின் அலுவலகம் அருகே தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com