கொடைக்கானலில் நாளை மலர்க் கண்காட்சி: முதல்வர் தொடங்கி வைக்கிறார்

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை (மே 19) நடைபெறும் கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியை முதல் முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவின் அழகை ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் சனிக்கிழமை (மே 19) நடைபெறும் கோடைவிழா மற்றும் மலர்க் கண்காட்சியை முதல் முறையாக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.
சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் கோடைவிழா மற்றும் 57ஆவது மலர்க் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் தமிழக முதல்வர் விழாப் பேரூரை நிகழ்த்துகிறார். நிகழ்ச்சிக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை வகிக்கிறார். 
வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். 
முதல்முறையாக முதல்வர்: மலைகளின் இளவரசி என போற்றப்படும் கொடைக்கானலில், கடந்த 56 ஆண்டுகளாக கோடை விழா நடைபெற்று வருகிறது. 
இதுவரை அமைச்சர்கள் மட்டுமே பங்கேற்று வந்துள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டில் தமிழக முதல்வர் மலர்க் கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். 
முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால், மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 
ரோஜா தோட்டம்: கொடைக்கானலில் ரூ.10 கோடி செலவில் 10 ஏக்கரில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரோஜா தோட்டத்தையும் முதல்வர் திறந்து வைக்கிறார். இந்த ரோஜா தோட்டத்தில் 2 ஆயிரம் வகையான 15ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன . 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com