பி.இ. ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்தி வரும் பி.இ. ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் செயல்படுத்தி வரும் பி.இ. ஆன்லைன் விண்ணப்ப முறைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பி.இ. படிப்பில் சேர நேரடியாக விண்ணப்பிக்கும் முறையையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் கூறி விட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக எம்.எல்.ஏ எழிலரசன் மற்றும் வழக்குரைஞர் பொன்.பாண்டியன் தனித்தனியாக தாக்கல் செய்த மனுவில், பி.இ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வி.பார்த்திபன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ''பி.இ. படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு முழுமையாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு கிராமப்புற மாணவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது. ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண்ணப்பிப்பதை எளிதாக்க தமிழகம் முழுவதும் உதவி மையங்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் கடந்த மே 3-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. மேலும், விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகச் செலுத்தவும், உதவி மையங்களில் மாணவர்களுக்கு உதவிட பயிற்சி பெற்ற நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. 
இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ''பி.இ. படிப்புக்கு 2 லட்சம் மாணவர்கள் விண்ணப்பிக்கும்போது ஏற்படும் கால விரயம் மற்றும் அதனால் ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை ஆன்லைன் முறை விண்ணப்பிக்கும் முறை குறைக்கிறது. எனவே, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறையால் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்ற அண்ணா பல்கலைக்கழகத்தின் உத்தரவாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். ஆன்லைன் மூலம் மட்டுமின்றி நேரடியாக விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்கும் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது.
அதே நேரம் மாணவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்கும் போது ஏதேனும் சிரமங்கள் ஏற்பட்டால் அது தொடர்பாக மனுதாரர்கள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் தாராளமாக முறையிடலாம். மேலும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் நாளிதழ்கள் மூலம் விளம்பரப்படுத்த வேண்டும். வரைவோலைக் கட்டணத்தைப் பெறுவதில் எந்த இடையூறும் இருக்கக் கூடாது. 
இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தியது தொடர்பான அறிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் வரும் ஜூன் 8-ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்'' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com