முதுநிலை மருத்துவம்: தமிழக இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு

பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இழுபறிக்குப் பின்பு முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்க உள்ளது.
முதுநிலை மருத்துவம்: தமிழக இடங்களுக்கு இன்று முதல் கலந்தாய்வு

பல்வேறு நீதிமன்ற வழக்குகளின் இழுபறிக்குப் பின்பு முதுநிலை மருத்துவப் படிப்பில் தமிழக இடங்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை தொடங்க உள்ளது. கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் வியாழக்கிழமை இரவு வெளியிடப்பட்டது.

புதிய விதிமுறை: முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான விதிமுறைகளில் இந்திய மருத்துவக் கவுன்சில் கடந்த கல்வியாண்டில் மாற்றம் கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் அரசு மருத்துவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டு இடங்களில் வழங்கப்பட்ட 50 சதவீத இடங்கள் ரத்து செய்யப்பட்டன. மாறாக தொலைதூர மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் சலுகை மதிப்பெண் வழங்கலாம் என்று விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புகளும் போராட்டங்களும் எழுந்த நிலையில் அனைத்து அரசு மருத்துவமனைகளையும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் வகைப்படுத்தி தமிழக அரசு கலந்தாய்வை நடத்தியது.

வழக்குகளும் தாமதமும்: நிகழ் கல்வியாண்டில் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கு எளிதில் அணுக முடியாத இடங்களை தமிழக அரசு வகைப்படுத்தி மார்ச் 23-ஆம் அரசாணை வெளியிட்டது. ஆனால், இந்த அரசாணையினால் குறிப்பிட்ட சில அரசு மருத்துவர்களுக்கு மட்டுமே அதிக பயன் ஏற்படும் என்று கூறி அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தீவிர சிகிச்சைப் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட சில பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்க இயலாது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள பிற இடங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.
இந்நிலையில் அரசு மருத்துவர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் வழங்கக் கோரி தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசு மருத்துவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என்றும், சலுகை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று உத்தரவிட்டது.

முதுநிலை கலந்தாய்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வந்ததால் ஏப்ரல் மாதம் தொடங்க வேண்டிய கலந்தாய்வு தாமதித்துக் கொண்டே வந்தது. வழக்குகள் விசாரணைகள் நிறைவடைந்ததால் தற்போது கலந்தாய்வு நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

சலுகை மதிப்பெண்: வழக்குகளின் தீர்ப்புகளின் அடிப்படையில் தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு மருத்துவர்களுக்கு சலுகை மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. நீதிமன்ற வழக்கு இழுபறிகள் முடிவுக்கு வந்ததையடுத்து வியாழக்கிழமை இரவு தரவரிசைப் பட்டியலை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.

இன்று முதல் கலந்தாய்வு: அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவம், முதுநிலை டிப்ளமோ, முதுநிலை பல் மருத்துவம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள முதுநிலை இடங்கள் ஆகியவற்றுக்கான முதற்கட்ட கலந்தாய்வு மே 19-ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்க உள்ளது. முதல்நாளான சனிக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. அனைத்துப் பிரிவினருக்குமான கலந்தாய்வு மே 20-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தரவரிசைப் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை ஆகியவை www.tnhealth.org,  www.medicalselection.org  ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

மொத்த இடங்கள்: தமிழகத்தில் முதுநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்த 981 இடங்கள் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகள் இதுவரை 122 இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு சமர்ப்பித்துள்ளன. எனவே, முதல் கட்ட கலந்தாய்வு 1,103 இடங்களுக்கு நடைபெற உள்ளது. சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மே 31-ஆம் தேதிக்குள் முதுநிலை மருத்துவக் கலந்தாய்வுக்கான அனைத்து நடைமுறைகளும் நிறைவடைய வேண்டும்.


அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நிறைவு
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நிறைவுபெற்றது.

அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு மார்ச் 27-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இரண்டு கட்ட கலந்தாய்வுக்குப் பின்னர் அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரம்பாத இடங்கள், அந்தந்த மாநிலங்களின் ஒதுக்கீட்டுக்கான ஏப்ரல் 23-ஆம் தேதி சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கலந்தாய்வுக்கான முடிவுகள் சனிக்கிழமை (மே 19) வெளியிடப்படும். 

ஜ்ஜ்ஜ்.ம்ஸ்ரீஸ்ரீ.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் கலந்தாய்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம். கலந்தாய்வில் இடங்களைப் பெற்ற மாணவர்கள் வரும் மே 26-ஆம் தேதிக்குள் கல்லூரிகளில் சென்று சேர வேண்டும். 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள், மே 26-ஆம் தேதி மாலையில் அந்தந்தக் கல்லூரிகளிடமே சமர்ப்பிக்கப்படும்.

அந்த இடங்களை தனியார் மருத்துவக் கல்லூரிகள் நீட் தேர்வின் அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம். தனியார் கல்லூரிகள் மூலம் இடங்களைப் பெறும் மாணவர்கள் மே 31-ஆம் தேதிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com