வருகைப் பதிவு குறைவு: தேர்வு எழுத அனுமதி மறுப்பு

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விதிகள் மற்றும் சட்டக் கல்லூரி இயக்குநரகத்தின் உத்தரவுப்படி 66 சதவீதத்துக்கு குறைவான வருகைப் பதிவு உள்ள மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது

டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விதிகள் மற்றும் சட்டக் கல்லூரி இயக்குநரகத்தின் உத்தரவுப்படி 66 சதவீதத்துக்கு குறைவான வருகைப் பதிவு உள்ள மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உயர் நீதிமன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் இரண்டாம் ஆண்டு மாணவர் பி.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவில், மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்ட நான் சொந்த ஊருக்கு சிகிச்சை பெற சென்று விட்டேன். இதனால் என்னால் கல்லூரிக்குச் செல்ல முடியவில்லை.
இந்த நிலையில் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டிய 4 ஆவது பருவத் தேர்வு (செமஸ்டர்) கட்டணத்தை செலுத்தவில்லை. உடல் நலம் தேறி கல்லூரிக்குத் திரும்பி வந்த போது சட்டக்கல்லூரி இடமாற்றத்தைத் கண்டித்து மாணவர்கள் நடத்திய உள்ளிருப்புப் போராட்டத்தின் காரணமாக கல்லூரி ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் செயல்படவில்லை.
இதன் காரணமாக எனது வருகைப்பதிவு குறைந்து விட்டது. எனவே, என்னை 4-ஆவது பருவத் தேர்வை எழுத அனுமதிக்கவும், அதற்கான தேர்வுக் கட்டணத்தைப் பெறவும் கல்லூரி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். 
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டக் கல்லூரி முதல்வர் சி.சொக்கலிங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்தப் பதில் மனுவில், மாணவர் குறிப்பிட்ட தேதிக்கு முன் கட்டணத்தை செலுத்தவில்லை. மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கல்லூரி நடைபெறாத நாள்களுக்காக நடத்தப்பட்ட சிறப்பு வகுப்புகளிலும் அவர் பங்கேற்கவில்லை.
டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக விதிகள் மற்றும் சட்டக் கல்வி இயக்குநரகத்தின் உத்தரவுப்படி 66 சதவீதத்துக்கு குறைவான வருகைப்பதிவு கொண்ட மாணவர்களைஅந்த பருவத் தேர்வை எழுத அனுமதிக்க முடியாது. மனுதாரரான மாணவருக்கு 66 சதவீதத்துக்கும் குறைவாக வருகைப் பதிவு உள்ளதால், அவரைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. 
மீண்டும் மாணவர் 4-ஆவது பருவத்தை படிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவர் உரிய தேதிக்குள் கட்டணம் செலுத்தவில்லை. அவருக்கு போதிய வருகைப்பதிவும் இல்லை. எனவே அவர் மீண்டும் 4-ஆவது பருவத்தை படிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com