அரசு மருத்துவ இடங்கள் பறி போகாமல் தடுக்கப்படுமா?

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதால், ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட முடிவு
அரசு மருத்துவ இடங்கள் பறி போகாமல் தடுக்கப்படுமா?

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்குக் கடந்த 5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளதால், ஒத்துழையாமைப் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு, மருத்துவ இடங்கள் பறிபோகும் நிலை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

சுகாதாரத் துறை அமைச்சர், துறையின் முதன்மைச் செயலர் உள்ளிட்டோரை அண்மையில் சந்தித்த தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், பதவி உயர்வு அளிக்காவிட்டால், இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ) மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வுக்கு வரும்போது ஒத்துழைக்க மாட்டோம் என்று தெரிவித்தனர்.

பிரச்னை என்ன?: அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் இணைப் பேராசிரியர்களுக்கு, பேராசிரியர் பதவி உயர்வு கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்படவில்லை. சுமார் 30 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்குவதில் சில தேக்கங்கள் காணப்பட்டன. அதனைக் களைவதற்காக 2009-இல் ஓர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் 2013-ஆம் ஆண்டு வரை பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால், அதில் சிலர் விதிகளை மீறியதாகக் கூறப்படுகிறது. இதனால் பேராசிரியர் பதவி உயர்வு 2013 முதல் நிறுத்தப்பட்டது. 

மருத்துவர்களின் அழுத்தம் காரணமாக 2015-இல் 157 இணைப் பேராசிரியர்களுக்கு மட்டும் பேராசிரியர்களாகப் பதவி உயர்வு அளித்து முன்னாள் முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன் பின் பதவி உயர்வு அளிக்கப்படவில்லை.

550 பேராசிரியர் காலியிடங்கள்: தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளாகப் பதவி உயர்வு வழங்கப்படாததால் 550 பேராசிரியர் இடங்கள் நிரப்பப்படவில்லை.
550 இடங்களுக்கு 700-க்கும் மேற்பட்ட தகுதி வாய்ந்த இணைப் பேராசிரியர்கள் காத்திருக்கின்றனர். 5 ஆண்டுகளில் சுமார் 200 இணைப் பேராசிரியர்கள் பதவி உயர்வு கிடைக்காமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர்.

மாணவர்களுக்கு பாதிப்பு: பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால் அப்பணியிடங்களுக்கான பணியையும் இணைப் பேராசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதனால், பணிச் சுமை காரணமாக கற்பித்தலில் தரம் குறையும். நோயாளிகளின் சேவையும் பாதிக்கப்படும். பேராசிரியர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஊதியப் பயன், ஓய்வூதியப் பயன் இவையும் பாதிக்கப்படுவதாக இணைப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒத்துழைக்க மறுப்பு: மருத்துவக் கல்லூரிகளுக்கு வழங்கப்பட்ட இடங்களுக்கான அனுமதியைப் புதுப்பிப்பதற்காக எம்சிஐ அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவது வழக்கம். அப்போது இணைப் பேராசிரியர்களை பேராசிரியர்களாகத் தமிழக அரசு கணக்குக் காட்டி அனுமதி பெறுகிறது. பதவி உயர்வு அளிக்காததால் எம்சிஐ ஆய்வுக்கு ஒத்துழைக்க மாட்டோம் என்று இணைப் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். 

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் செந்தில் கூறியது: "வருத்தத்தோடு ஒத்துழைக்காமல் இருக்கும் முடிவுக்குத் தள்ளப்பட்டுள்ளோம். வரும் புதன், வியாழக்கிழமைகளில் (மே 23, 24) சில கல்லூரிகளுக்கு எம்சிஐ அதிகாரிகள் ஆய்வுக்கு வரவுள்ளனர். அதற்குள் தமிழக அரசு பதவி உயர்வை அளிக்காவிட்டால் எம்சிஐ அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது பணிக்குச் செல்வோம். ஆனால், பேராசிரியர்கள் கணக்கெடுப்பில் கலந்து கொள்ள மாட்டோம். இதனால், அனைத்துத் தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றார் அவர்.

அனுமதிக்கப்பட்ட இடங்கள்: இணைப்பேராசிரியர்கள் ஒத்துழைக்க மறுத்தால் இத்தனை ஆண்டுகளாக சிறுகச் சிறுக அதிகரித்துக் கொண்டு வந்துள்ள மருத்துவ இடங்களின் எண்ணிக்கை குறையும். இடங்கள் குறைந்தால் தமிழகத்தில் மருத்துவர்களின் எண்ணிக்கையும் குறையும். இதனால் மருத்துவ சேவையிலும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. அரசு கோப்புகளில் ஏற்படும் தாமதம்தான் இணைப் பேராசிரியர்கள் விஷயத்திலும் நடைபெற்று வருகிறது. 
தலைமைச் செயலகம், நிதித்துறை என ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வுக்கான கோப்புகள் நத்தை வேகத்திலேயே நகர்கின்றன என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போது அரசு மருத்துவர்கள் கோரும் பதவி உயர்வுகள் அனைத்துமே ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட இடங்களுக்குத்தான். 
அதற்கான அனுமதியை அளிப்பதில் அரசுக்கு பெரிய இழப்பு ஏற்படப் போவதில்லை. எனவே, உரிய நேரத்தில் பதவி உயர்வை அளித்து தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்'' என்றார் டாக்டர் செந்தில்.

பாதிப்பு என்ன ?

அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஒரு பேராசிரியருக்கு 3 முதுநிலை இடங்கள், இணைப் பேராசிரியருக்கு 2 முதுநிலை இடங்கள் வீதம் அனுமதி அளிக்கப்படுகிறது. இணைப் பேராசிரியர்கள் ஆய்வு சமயத்தில் ஒத்துழைக்காவிட்டால், போதுமான அளவு பேராசிரியர்கள் இல்லை என்று கூறி அனுமதி அளிக்கப்பட்ட முதுநிலை மருத்துவ இடங்கள் ரத்து செய்யப்படும். இடங்கள் ரத்து செய்யப்பட்டால் புதிய மாணவர்கள் சேர்க்கை பாதிக்கப்படும். அனுமதி ரத்து செய்யப்பட்ட கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படும். அந்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தாலும் பணியாற்றுவதற்குப் பெயரைப் பதிவு செய்ய முடியாது. இதனால் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com