கால்நடை மருத்துவம்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2018 - 19-ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் திங்கள்கிழமை (மே 21) தொடங்கின.
கால்நடை மருத்துவம்: ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் 2018 - 19-ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் திங்கள்கிழமை (மே 21) தொடங்கின.
பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெற உள்ள இந்த மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 6-ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம்.
கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏஹெச்) படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக். கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பப் பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
இணையதளத்தில் விண்ணப்பம்: இந்தப் படிப்புகளுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம். இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய ஜூன் 6-ஆம் தேதி கடைசியாகும். இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களுடன் ""தலைவர், சேர்க்கைக் குழு (இளநிலை பட்டப்படிப்பு), தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால்பண்ணை, சென்னை - 51'' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி தேதி ஜூன் 11 ஆகும். 
கட்டணம் எவ்வளவு?: கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு படிப்புக்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.700, தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடினருக்கு ரூ.350 ஆகும். பி.டெக். படிப்புகளுக்கான கட்டணம் ரூ.1,200, தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடியினருக்கு ரூ. 600 ஆகும். பி.டெக் படிப்புகளுக்கு கடந்த ஆண்டில் தனித்தனி விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது ஒரே விண்ணப்பத்தில் மாணவர்கள் தங்கள் தேர்வுகளைக் குறிப்பிட்டு அனுப்பலாம்.
இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி.பாலச்சந்திரன் சென்னையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியது: 
விண்ணப்பங்களை எளிதாக நிரப்பும் வகையில் மாதிரி விண்ணப்பமும் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறும். உயிரியியல் 100, இயற்பியல் 50, வேதியியல் 50 என மொத்தம் 200 மதிப்பெண்ணுக்கு கட் -ஆஃப் மதிப்பெண் கணக்கிடப்படும். 
கால்நடை மருத்துவப் படிப்பில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு அளிக்கப்படும். பி.டெக் உணவுத் தொழில்நுட்பப் படிப்பில் 15 சதவீத இடங்கள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்படும். 
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூலை முதல் வாரத்தில் தரைவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 3-ஆம் வாரத்தில் முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்றார் அவர். 
வெளிநாடு வாழ் இந்தியர்கள்: கால்நடை மருத்துவப் படிப்பில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு 9 இடங்களும், அயல் நாட்டினருக்கு 5 இடங்களும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலிருந்து புலம் பெயர்ந்தோருக்கு 2 இடங்களும் உள்ளன. பிடெக் உணவுத்தொழில்நுட்பப் பாடப்பிரிவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் அயல் நாட்டினருக்கு தலா 2 இடங்கள் உள்ளன. அயல் நாட்டினர் மே 28-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய ஜூன் 30 கடைசித் தேதியாகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அனுப்ப ஜூலை 11 கடைசித் தேதியாகும் என்றார் அவர்.
இந்தப் பேட்டியின்போது தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் திருநாவுக்கரசு, தேர்வுக்குழு கட்டுப்பாட்டு அலுவலர் டாக்டர் கே.என்.செல்வகுமார், சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) கே.குமணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com