தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம்: போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டம்: போலீஸ் குவிப்பு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்துள்ள நிலையில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு முதல் புதன்கிழமை (மே 23) காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து ஆட்சியர் என். வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலையின் விரிவாக்க பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரெட்டியபுரம் கிராமம் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பிப்ரவரி 5-ஆம் தேதி தங்களது போராட்டத்தை துவங்கினர். அந்த போராட்டமானது இன்று 100வது நாளை எட்டியுள்ளது. 

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று செவ்வாய்க்கிழமை (மே 22) முற்றுகையிடப் போவதாக போராட்டக் குழுவினர் அறிவித்தனர். அவர்கள் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள மைதானத்தில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளித்தனர்.

இதற்கிடையே, சமரச பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட வீராங்கனை' அமைப்பைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பேராசிரியை பாத்திமாபாபு தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளதால் அவரை போராட்டக் குழுவில் இருந்து நீக்குவதாகவும், அறிவித்தபடி செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டப்படி நடைபெறும்' என்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது. 

ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டத்திற்கு ஆதரவாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தை அடுத்து தூத்துக்குடி மத்திய வியாபார சங்கத்தை சேர்ந்த சுமார் 65 கிளை சங்கங்களின் 40 ஆயிரம் உறுப்பினர்கள் கடைகளை அடைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைச் சுற்றியும், போராட்டம் நடைபெற்று வரும் கிராமங்களிலும், மாநகரப் பகுதியிலும் திங்கள்கிழமை இரவு முதல் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். ஸ்டெர்லைட் ஆலை முன்பும் போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். 

மேலும், போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவபவர்கள் என சந்தேகத்தின் அடிப்படையில் பலரை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே, நகரில் சட்டம், ஒழுங்கை பராமரித்திடும் வகையில், திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் புதன்கிழமை (மே 23) காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 144-இன் கீழ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் சிப்காட் காவல் நிலைய எல்கைகளுக்குள்பட்ட பகுதிகள் முழுவதற்கும் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று தூத்துக்குடி முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆட்சியரின் அலுவலகம் முற்றுகையிடப்படும் என்ற அறிவிப்பால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com