ரூ. 21,050 கோடியில் 14 பெரிய குடிநீர்த் திட்டங்கள்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகிக்கும் வகையில் ரூ. 21,050 கோடி மதிப்பீட்டில் 14 மிகப் பெரிய குடிநீர்த் திட்டங்களுக்கான பணிகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன
தொலைநோக்குத் திட்டத்தின்படி (2023) செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேட்டை வெளியிடுகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதை
தொலைநோக்குத் திட்டத்தின்படி (2023) செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு குடிநீர் முதலீட்டு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பயிற்சி கையேட்டை வெளியிடுகிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. அதை

தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகிக்கும் வகையில் ரூ. 21,050 கோடி மதிப்பீட்டில் 14 மிகப் பெரிய குடிநீர்த் திட்டங்களுக்கான பணிகள் ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தமிழக அரசின் "தொலைநோக்குத் திட்டம் 2023'-இல் உள்ள குடிநீர்த் திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்த கருத்தரங்கு, நகராட்சிப் பொறியாளர்களுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி நகராட்சி நிர்வாக ஆணையரகம், தமிழ்நாடு நீர் முதலீட்டு நிறுவனம் சார்பில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்துப் பேசியது: கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை ரூ. 5,356 கோடி மதிப்பில் நகர்ப்புறம், ஊரகப் பகுதிகளில் 60,904 குடிநீர்த் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தற்போது நாளொன்றுக்கு 7,382 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. 
பருவமழை, நிலத்தடி நீரை மட்டுமே தமிழகம் ஆதாரமாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் 2001-இல் 1,921 டிஎம்சியாக இருந்த குடிநீர்த் தேவை 2050-இல் 2,039 டிஎம்சியாக உயரும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ரூ. 21,050 கோடியில் 14 குடிநீர்த் திட்டங்கள்: மாநகராட்சிகள், நகராட்சிகளில் அம்ருத் திட்டத்தின் கீழ் ரூ. 7,450 கோடி மதிப்பீட்டில் 18 பெரிய குடிநீர்த் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில், தற்போது 11 குடிநீர்த் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மீதமுள்ள 7 குடிநீர் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
"தொலைநோக்குத் திட்டம்-2023' திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தமிழகத்தில், 24 மணி நேரமும் தங்குதடையின்றி குடிநீர் வழங்கும் வகையில் ரூ.21,050 கோடியில் 14 மிகப் பெரிய குடிநீர்த் திட்டங்கள் மேற்கொள்ள அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையமும், பேரூரில் 400 எம்எல்டி கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், நகராட்சி நிர்வாக ஆணையர் கோ.பிரகாஷ், தமிழ்நாடு நகர்ப்புற நிதி, அடிப்படை வசதி மேம்பாட்டுக் கழக மேலாண் இயக்குநர் சந்திரகாந்த் பி.காம்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com