ஸ்டெர்லைட்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை; போராட்டக்களமானது

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
ஸ்டெர்லைட்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வன்முறை; போராட்டக்களமானது


தூத்துக்குடி: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர்  அலுவலகப் பகுதிக்கு போராட்டக்காரர்களை வரவிடாமல் தடுத்து நிறுத்த முயன்ற காவல்துறையின் முயற்சி முறியடிக்கப்பட்டுவிட்டது. லட்சக்கணக்கான மக்களை தடுத்த நிறுத்த முடியாமல் காவல்துறையினர் திணறி வருகிறார்கள்.

பல்வேறு தடைகளைத் தாண்டி, போராட்டக்காரர்கள் திட்டமிட்டபடி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளனர். போராட்டக்காரர்கள் ஏராளமானோர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்துள்ளனர். அங்கே இருந்த இரு சக்கர வாகனத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததாகக் கூறப்படுகிறது. தீ கொழுந்துவிட்டு எரிவதையும் காண முடிகிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் காரணமாக சுமார் 2000க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றி உள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இன்று காலை மடத்தூரில் ஒருங்கிணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 

எனினும், சில நிமிடங்களில் தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் முன்னோக்கிச் சென்றனர்.

ஸ்டெர்லைட் ஆலையைச் சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாமல், தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். இடையிடையே கிராம மக்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

போராட்டக்காரர்களைக் கலைக்க, காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசினர். எனினும், கலைந்து செல்லாத போராட்டக்காரர்கள், ஆத்திரத்தில் காவல்துறை வாகனங்களை சேதப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர் புகைக் குண்டு, தடியடி, துப்பாக்கிச் சூடு ஆகிய நடவடிக்கைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் சிலரும், காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

நேரம் ஆக ஆக போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருப்பதாலும், நாலா திசையில் இருந்தும் கிராம மக்கள் திரண்டு வந்து கொண்டே இருப்பதாலும் காவல்துறையினர், அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறார்கள்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தவர்களை வெளியேற்ற காவல்துறை தடியடி நடத்தி வருகிறார்கள். அப்பகுதிக்கு ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி போராட்டக்களமாக காட்சியளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com