தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

தென்பாகம் மற்றும் சிப்காட் வட்டத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டத்துக்கு 25-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 
தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் மே 21-ஆம் தேதி இரவு 10 மணி முதல் 23-ஆம் தேதி காலை 8 மணி வரை 144 தடை உத்தரவை மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் பிறப்பித்திருந்தார். 

இதற்கிடையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நேற்று (செவ்வாய்கிழமை) 100-ஆவது நாளை எட்டியதை அடுத்து, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த முயன்றனர். அப்போது, பேரணியை தடுக்க முயன்ற போலீஸாருக்கும் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. 

இது அடுத்தகட்டமாக வன்முறையாக மாறியது. இதையடுத்து, போலீஸார் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். அதனால், தூத்துக்குடி முழுவதும் பதற்றமான சூழ்நிலை தென்பட்டது. போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, தூத்துக்குடி முழுவதும் இன்று 5000 போலீஸார் வரை குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலையுடன் நிறைவடைந்த 144 தடை உத்தரவை 25-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார். 

முன்னதாக, தென்பாகம் மற்றும் சிப்காட் வட்டத்துக்கு உட்பட்ட இடத்திற்கு தான் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு தூத்துக்குடி, திருச்செந்தூர் மற்றும் ஓட்டப்பிடாரம் ஆகிய வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்த பகுதிகளில் எந்த வகை பேரணிகளும், பொதுக்கூட்டங்களும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடியில் இன்று பேருந்துகள் இயங்கவில்லை, 2-ஆவது நாளாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com