அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்: கிராமப்புறங்களில் பணிகள் முடக்கம்

ஏழாவது ஊதியக்குழு தொடர்பாக கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்களின் காலவரையற்ற வேலை
அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்திலுள்ள அஞ்சல் பட்டுவாடா பிரிவு.
அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படும் திருச்சி தலைமை அஞ்சல் அலுவலக வளாகத்திலுள்ள அஞ்சல் பட்டுவாடா பிரிவு.

ஏழாவது ஊதியக்குழு தொடர்பாக கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இதன் காரணமாக கிராமப்புறங்களில் அஞ்சலகப் பணிகள் முற்றிலும் முடங்கின. மாநகரில் தபால் விநியோகம், பணப்பரிமாற்றம் நடைபெறுதல் போன்றவையும் முடங்கியுள்ளன.
அஞ்சல் துறையில் முதுகெலும்பாக திகழும் 2.65 லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஏழாவது ஊதியக்குழு தொடர்பான கமலேஷ் சந்திரா கமிட்டியின் சாதகமான பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும். 
கிராமப்புற அஞ்சல் ஊழியர் சங்க உறுப்பினர்களின் சரிபார்ப்பு முடிவுகளை வெளியிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களுக்கு ஆதரவாக அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சம்மேளனத்தினரும் (அஞ்சல் 3,4, ஆர்.எம்.எஸ். சங்கங்கள்) வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 
திருச்சி மண்டலத்துக்குள்பட்ட அஞ்சல் அலுவலகத்தின் கீழ், திருச்சி புறநகர்ப் பகுதிகள், லால்குடி, அரியலூர், ஜயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கியிருக்கின்றன. இப்பகுதிகளிலுள்ள கிராமப்புற அஞ்சலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் முழுவதுமாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர். 
இதன் காரணமாக கிராமப்புறங்களில் அஞ்சல் விநியோகம், பணப்பட்டுவாடா உள்ளிட்டஇதர பணிகள் ஏதும் செய்யப்படாததால் பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாநகரையொட்டியுள்ள குழுமணி, முத்தரசநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அஞ்சல் அலுவலகங்களும் மூடப்பட்டிருந்தன.
மாநகரில்...: திருச்சி தலைமை அஞ்சல் அலுவலகம் மற்றும் மாநகரப் பகுதிகளிலுள்ள அஞ்சல் அலுவலகங்கள் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கின. தபால் பட்டுவாடா, பணப்பரிமாற்றம், அஞ்சல் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகளும் முடங்கின. ஏறத்தாழ 800 க்கும் மேற்பட்டோர் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com