அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை காலை வெளியிடப்பட்டன. இதில் மொத்தம் 94.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். 

இதுகுறித்து பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தமிழகம், புதுச்சேரியில் கடந்த மார்ச் 16 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 10 லட்சத்து 1,140 மாணவர்கள் எழுதினர். இதில் மாணவிகள் 96.4 சதவீதமும், மாணவர்கள் 92.5 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பொதுத்தேர்வில் தேர்வெழுதிய 9.5 லட்சம் மாணவர்களில் 8.97 லட்சம் மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளி மாணவர்கள் சமர்ப்பித்த செல்லிடப்பேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் மதிப்பெண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

மொத்தம் 5,456 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சிவகங்கை, ஈரோடு, விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள் முதல் 5
இடங்களைப் பிடித்துள்ளன. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டு 94.4% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர், இது கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேர்ச்சி பெறாதவர்கள் ஜுன் 28 ஆம் தேதி மறுதேர்வு எழுதலாம். 14417 என்ற கட்டணமில்லா எண்ணில் தொடர்பு கொண்டு மாணவர்கள் அறிவுரை பெறலாம். அரசுப் பள்ளிகளை மூடும் திட்டம் தமிழக அரசுக்கு இல்லை. குறைவாக மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பான பாடத்திட்டம் ஏற்பட்டுள்ளதால் விரைவில் சிபிஎஸ்இ பள்ளிகளை விட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com