தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: தலைவர்கள் கண்டனம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் மரணமடைந்த சம்பவத்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

மு.க.ஸ்டாலின் (திமுக): ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நீண்ட காலமாக போராடி வருவதை அதிமுக அரசு கண்டு கொள்ளவும் இல்லை, சுமுகத் தீர்வு காணவும் இல்லை. வழக்கம்போல் மக்கள் போராட்டத்தை முடக்க நினைத்த அரசின் அலட்சியத்தாலேயே துப்பாக்கிச் சூடு வரை சென்றுள்ளது.
இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சு.திருநாவுக்கரசர் (காங்கிரஸ்): கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் கொல்லப்பட்டும், பலர் படுகாயமடைந்தும் தூத்துக்குடியே போர்க்களமாக உள்ளது. இது குறித்து நீதிபதி மூலம் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். 

இல.கணேசன் (பாஜக): 

ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலன் பாதிப்பு இருந்தால் தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டியது அவசியம். 
விஜயகாந்த் (தேமுதிக): ஆலைக்கு உடனடியாக ஆளும் அதிமுக அரசும், மத்திய அரசும் தடை விதித்து நிரந்தரமாக மூட வேண்டும். சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தமிழக அரசு தவறிவிட்டது. 

வைகோ (மதிமுக):

உயிர்ப்பலி வாங்கிய துப்பாக்கிச் சூட்டுக்குக் காரணமான போலீஸôர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிவாரணத் தொகையும், படுகாயமுற்றவர்களுக்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும்.

ராமதாஸ் (பாமக): ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் ஒருவகையான அறவழிப் போராட்டம் என்பதால் அதை அமைதியாக நடத்த அனுமதித்திருக்க வேண்டும். நல்ல நோக்கத்துக்காக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக மாறியதற்கு அரசின் அணுகுமுறையே காரணம். 

கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்):

அமைதியாகப் போராடும் மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஆலையை உடனே மூட வேண்டும்.

இரா. முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்):

போராட்டக்காரர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அனைத்து விளைவுகளுக்கும் மாநில அரசே முழுக் காரணம். ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி):

தூத்துக்குடியில் அறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. மக்களுக்கு அழிவை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்குப் பதில் துப்பாக்கிச் சூடு நடத்தும் செயல் மிகக் கொடுமையானது.

திருமாவளவன் (விசிக):

டெர்லைட் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீஸôர் மீது கொலை வழக்கு பதிவு செய்யவேண்டும். 

கி.வீரமணி (திராவிடர் கழகம்):

டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை மத்திய, மாநில அரசுகள் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.

உயிர் பலிகளால் போராட்டம் ஓய்ந்துவிடாது. இது மேலும் தீவிரப்படுத்தும்.
ஜி.கே.வாசன் (தமாகா): போராட்டத்தில் ஈடுபட்டோரைத் தடுக்கத் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இனியும் காலம் தாழ்த்தாமல் ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை வெளியிட வேண்டும். 

ஜவாஹிருல்லா (மமக):

ஜனநாயக ரீதியாகப் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது அப்பட்டமான மனித உரிமை மீறல்.

நிஜாமுதீன் (இந்திய தேசிய லீக்):

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை அரசு உடனே இழுத்து மூட வேண்டும். 

டிடிவி தினகரன் (அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்):

தூத்துக்குடி மக்களின் பிரச்னைக்கு ஒரே நிரந்தரமான தீர்வு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதுதான். ஆலையை நிரந்தரமாக மூடும் வரை மக்கள் சக்தியே பெரியது என்பதை உணர்த்தும் வகையில், உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com