10-ஆம் வகுப்பு: 94.5% மாணவர்கள் தேர்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி வீதம் 0.1 சதவீத ம் அதிகரித்துள்ளது.
சென்னையில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை செல்லிடப்பேசியில் பார்க்கும் மாணவிகள்.
சென்னையில் பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகளை செல்லிடப்பேசியில் பார்க்கும் மாணவிகள்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 94.5 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் தேர்ச்சி வீதம் 0.1 சதவீத ம் அதிகரித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 16 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 64 ஆயிரத்து 401 மாணவ, மாணவிகள் எழுதினர். இது தவிர தனித் தேர்வர்களாக 34, 649 பேர் தேர்வில் பங்கேற்றனர். 
இந்த நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. மாணவ, மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 94.5 சதவீதம் ஆகும். இதில் 96.4 சதவீத மாணவிகளும், 92.5 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளின் தேர்ச்சி 3.9 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டைக் காட்டிலும் (94.4 சதவீதம்) மொத்த தேர்ச்சி 0.1 சதவீதம் அதிகரித்துள்ளது. 
பாடவாரியான தேர்ச்சியில் அதிகபட்சமாக அறிவியல் பாடத்தில் 98.47 சதவீதம், குறைந்தபட்சமாக கணிதத்தில் 96.18 சதவீத மாணவர்களும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
சிவகங்கை- ஈரோடு: மாவட்ட வாரியான தேர்ச்சியில் சிவகங்கை (98.50 சதவீதம்), ஈரோடு (98.38 சதவீதம்), விருதுநகர் (98.26 சதவீதம்) ஆகிய மாவட்டங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அதேபோன்று அரசுப் பள்ளிகளில் ஈரோடு (97.84 சதவீதம்), ராமநாதபுரம் (97.68 சதவீதம்), தேனி (97.46 சதவீதம்) ஆகிய மாவட்டங்கள் மூன்று இடங்களைப் பெற்றுள்ளன.
1,687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் சேர்த்து மொத்தம் 5,584 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன; குறிப்பாக தேர்வெழுதிய 5,456 அரசுப் பள்ளிகளில், 1,687 அரசுப் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.
தேர்வெழுதியவர்களில் 500-க்கு 481 மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் 9,402 மாணவர்கள் பெற்றுள்ளனர். அதிகபட்சமாக 301 முதல் 400 வரையிலான மதிப்பெண்களில் 3 லட்சத்து 66,084 (38.52 சதவீதம்) மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். 
தேர்வு முடிவுகள் மாணவர்களின் பெற்றோருக்கு செல்லிடப்பேசி மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் தேர்வுத் துறையின் இணையதள முகவரிகள், பள்ளிகள் மூலமாகவும் மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொண்டனர். 
மறுகூட்டலுக்கு இன்று முதல்... பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதியவர்களில் விடைத்தாள்களின் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை மாலை 5.30 மணி வரை மாணவர்கள் தங்களது பள்ளி மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். 
ஜுன் 28-இல் சிறப்பு துணைத் தேர்வு: கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வெழுத பதிவு செய்து, தேர்ச்சி பெறாதவர்களுக்கும், வருகை புரியாதவர்களுக்கும் ஜூன் 28-ஆம் தேதி முதல் சிறப்புத் துணைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியாக அறிவிப்பு வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை இயக்ககம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com