தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, வேறு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீஸார் புதன்கிழமை உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, வேறு எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் போலீஸார் புதன்கிழமை உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. 
இதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் துப்பாக்கிச்சூட்டை கண்டித்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கடந்த இரு நாள்களாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரீனாவில் பாதுகாப்பு: சென்னையில் மெரீனாவில் போராட்டம் நடத்தப் போவதாக வெளியான தகவலை அடுத்து அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. அதேபோல தலைமைச் செயலகத்தை சில இயக்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்போவதாக வெளியான தகவலால், தலைமைச் செயலகம் பகுதியிலும் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
மீனவ குப்பங்களில்: சென்னை பெருநகர காவல்துறைக்கு எல்லைக்கு உட்பட்ட எண்ணூர் தொடங்கி கானத்தூர் வரை அனைத்து மீனவ குப்பங்களிலும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. சென்னையின் பாதுகாப்புப் பணிக்காக கூடுதலாக ஆயிரம் போலீஸார் புதன்கிழமை வரவழைக்கப்பட்டனர். இவர்கள் போராட்டம் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தமிழகம் முழுவதும் உஷார்: இதேபோல மாநிலம் முழுவதும், எவ்வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் தடுப்பதற்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறும், உஷார் நிலையில் இருக்குமாறும் டி.ஜி.பி. அலுவலகம், அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், மாநகர காவல் ஆணையர்களுக்கும் புதன்கிழமை அறிவுறுத்தியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
குறிப்பாக கடலோர நகரங்களில் பாதுகாப்பு அதிகரிக்கும்படியும், கடலோர கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கும்படியும் டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து இப் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
உயர் அதிகாரிகள் உத்தரவு: இதேபோல போராட்டம் என்ற பெயரில் சட்டம், ஒழுங்குக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் தமிழக காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நிலைமை சீராகும் வரையில் நீடிக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com