தூத்துக்குடியில் மீண்டும் துப்பாக்கிச் சூடு: இளைஞர் பலி

தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை தடியடி நடத்திய போலீஸார்.
அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை தடியடி நடத்திய போலீஸார்.

தூத்துக்குடியில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதற்கிடையே செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதன் மூலம் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்திய மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸார் தடியடி, கண்ணீர்ப் புகை குண்டுவீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். திரேஸ்புரம் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதவிர 60-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உறவினர்கள் போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு புதன்கிழமை திரண்டனர். அப்போது அவர்கள் போலீஸாருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இதற்கிடையே காயமடைந்தவர்களை பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷை மக்கள் முற்றுகையிட்டதால், போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.
பெட்ரோல் குண்டுவீச்சு: இதற்கிடையே தூத்துக்குடி அரசு மருத்துவமனை சாலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மீது போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கற்களை வீசினர். இதையடுத்து தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் அவர்களை விரட்டியடித்தனர். இதனால் கோபமடைந்த போராட்டக் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், போலீஸார் மீது பெட்ரோல் குண்டுகளை வீசியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. 
போலீஸ் வாகனம் எரிப்பு: இந்த நிலையில் தூத்துக்குடி பிரையண்ட் நகர் 2-ஆவது தெருவில் நிறுத்தப்பட்டிருந்த காவல் துறையின் இரு பேருந்துகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் ஒரு பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானது. மற்றொரு பேருந்தில் பற்றிய தீயை போலீஸார் அணைத்தனர். தீ வைத்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதேபோல் பண்டுதரை சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காருக்கு மர்மநபர்கள் தீவைத்துச் சென்றனர். இதில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது.
மீண்டும் துப்பாக்கிச் சூடு: தூத்துக்குடி மாநகரப் பகுதியில் போலீஸார் புதன்கிழமை ஆங்காங்கே அணிவகுப்பு மேற்கொண்டனர். தூத்துக்குடி அண்ணா நகர் 6-ஆவது தெருவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேந்திரன் தலைமையில் போலீஸார் அணிவகுப்பிற்கு சென்றபோது, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஆங்காங்கே மறைந்து நின்றபடி பலமுனைகளில் இருந்தும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். இதில் காவல் கண்காணிப்பாளர் மகேந்திரனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் காளியப்பன் (22) பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ராஜகோபால் நகரைச் சேர்ந்த மந்திரம் (53), சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஆழ்வார் (17), தூத்துக்குடி மேலரதவீதியைச் சேர்ந்த வீரபாகு (21), திரவியபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் (39), தாளமுத்து நகரைச் சேர்ந்த பாலா (32), ராஜகோபால் நகரைச் சேர்ந்த காளிமுத்து (52), அம்பேத்கர் நகரைச் சேர்ந்த வேலுசாமி (45) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உசிலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் (50) புதன்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் பலி எண்ணிக்கை 12 ஆக உயர்ந்தது.
காவல் துறை கட்டுப்பாட்டில் தூத்துக்குடி: தமிழக சட்டம்-ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் விஜயகுமார் மேற்பார்வையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இயல்பு வாழ்க்கை முடங்கியபோதிலும், மாநகரப் பகுதி காவல் துறை கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
சடலங்களை வாங்க மறுப்பு! துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்களை வாங்க மறுத்து அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், "எங்களுக்கு அரசின் நிவாரணம் தேவையில்லை. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை சடலத்தை வாங்கமாட்டோம்' என்றனர். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைக்கப்பட்டிருக்கும் பிணவறையைச் சுற்றி துப்பாக்கிய ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர் கி.பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com