பலியானோரின் உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவு: உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பலியானோரின் உடல்களை பாதுகாப்பாக வைத்திருக்க உத்தரவு: உயர் நீதிமன்றம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுநல வழக்கு: இதுதொடர்பாக வழக்குரைஞர்கள் எஸ்.ஜிம்ராஜ் மில்டன், டி.பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனு விவரம்:
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் தூத்துக்குடியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. போராட்டத்தின் 100 -ஆவது நாளான செவ்வாய்க்கிழமை ( மே 22) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டம் குறித்து பொதுமக்கள் 10 நாள்களுக்கு முன்பாகவே அறிவித்திருந்தனர்.
அமைதியான முறையில் நடந்த இந்தப் போராட்டத்தை, போலீஸார் திட்டமிட்டே போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடப் போவதாக வதந்தியை கிளப்பி, பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, தூப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் அரசு நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை பொதுமக்கள் இழந்துவிட்டனர். 
"ஸ்னைப்பர்' ரக துப்பாக்கிகள்: அப்பாவி பொதுமக்களை போலீஸார் விலங்குகளை வேட்டையாடுவது போல் சுட்டுக் கொன்றுள்ளனர். போலீஸ் வாகனங்கள் மீது ஏறி போராட்டத்தை முன்னின்று நடத்திய முக்கிய நபர்களை ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகளைக் கொண்டு குறிபார்த்து சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த கொடூர செயலில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கூட்டுச் சதியுடன் செயல்பட்டுள்ளனர். 
சட்ட உதவிகள்: இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் உடலை உடற்கூறு ஆய்வு செய்யும்போது, பொதுமக்களின் சார்பில் தனியார் டாக்டர்களை அனுமதிக்க வேண்டும். 
இந்த கலவரம் குறித்து எந்த ஒரு விசாரணையையும் மேற்கொள்ளக் கூடாது என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும். 
மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவிகளை செய்ய, தூத்துக்குடி செல்லும் வழக்குரைஞர்களை போலீஸார் தடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும். சட்டவிரோதமாக 
பிடித்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி பொதுமக்களை உடனடியாக விடுவிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும்.
மாவட்ட நீதிபதி விசாரணை: சாதாரண உடையணிந்த போலீஸார், பொதுமக்களை குறிபார்த்து சுட உத்தரவிட்டது யார், அதுவும் ஸ்னைப்பர் ரக துப்பாக்கியால் பயிற்சி பெற்ற போலீஸாரைக் கொண்டு துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்பவை தொடர்பாக விசாரணை நடத்த, தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதிக்கு உத்தரவிட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது. 
இந்த வழக்கு நீதிபதிகள் டி.ரவீந்திரன், பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால நீதிமன்ற அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு, "மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ், காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். போராட்டக்காரர்களை எச்சரிக்கும் விதமாக அவர்களின் கால்களில் சுடாமல், மார்பில் சுட்டுக் கொலை செய்துள்ளனர். போராட்டத்தை முன்னின்று வழிநடத்தியவர்களை போலீஸார் திட்டமிட்டு கொலை செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி விசாரணை செய்தார். இந்த விசாரணையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தச் சம்பவம் குறித்தும் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார். 
நீதிபதி கடும் கண்டனம்: அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர், "மக்களுக்கான அரசு மக்களுக்கான பணியைச் செய்து வருகிறது. அனைத்து நடவடிக்கைகளும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது' என்றார். 
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி பி.வேல்முருகன், "இங்கு அரசியல் வாதம் தேவையில்லை. தூத்துக்குடியில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் நாங்கள் இங்கு வரவில்லை. அங்கு நடப்பதை நாங்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். முதலில் நாம் எல்லோரும் மனிதர்கள். மனிதத்தன்மையுடன் செயல்பட்டுவிட்டு மற்றதை பேச வேண்டும். இந்த அரசை குற்றம்சாட்டவோ, பாராட்டவோ நாங்கள் விரும்பவில்லை. எந்தச் செயலும் சட்டத்துக்கு உட்பட்டு நடைபெற வேண்டும்' என கருத்து தெரிவித்தார். 
இதைத்தொடர்ந்து , "துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது' எனக் கூறிய அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர், அந்த உத்தரவின் நகலை தாக்கல் செய்தார்.
உடல்களை பாதுகாக்க: அதைப் படித்து பார்த்த நீதிபதிகள், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை பதப்படுத்தி பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சட்ட உதவி செய்ய செல்லும் வழக்குரைஞர்களை போலீஸார் தடுக்கக் கூடாது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை வரும் 30 -ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com