மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவர் 445 மதிப்பெண் எடுத்து சாதனை

பீடி சுற்றும் தொழிலில் இருந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 445 மதிப்பெண் பெற்று
மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவர் 445 மதிப்பெண் எடுத்து சாதனை

பீடி சுற்றும் தொழிலில் இருந்து 8 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைத் தொழிலாளியாக மீட்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 445 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவரைப் போன்று மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளி மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400-க்கும் மேல் மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
சட்டப்படி 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தக் கூடாது. மேலும் 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர்களை எந்தவிதமான அபாயகரமான தொழிலிலும் ஈடுபடுத்தக்கூடாது.
குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதில் ஓடி விளையாடுவதையும், பள்ளி செல்லும் வாய்ப்பையும் இழந்த இந்தச் சிறுவர்களை மீட்டு, மீண்டும் பள்ளிக்கு அனுப்பி சாதிக்க தூண்டும் சிறந்த பணியை தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். 
இவ்வாறு மீட்கப்படும் குழந்தைகள் முதலில் குழந்தைத் தொழிலாளர் நலப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பின்னர், முறையானப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர்.
300-க்கும் மேற்பட்டோர்...இவர்களில் 300-க்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஆசை: பீடி சுற்றும் தொழில் இருந்து கடந்த 2010-ஆம் ஆண்டு மீட்கப்பட்ட வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 500-க்கு 445 மதிப்பெண்கள் பெற்று மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவர் தமிழில் 92, ஆங்கிலத்தில் 94, கணிதத்தில் 73, அறிவியலில் 89, சமூக அறிவியலில் 97 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ்-2 முடித்து விண்வெளி ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பதை தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக, மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் பிளஸ்-2 பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற அபிதா (1105) என்பவரின் சகோதரி வர்ஷா என்ற மாணவி 500-க்கு 439 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் குடும்பச் சூழல் காரணமாக சிறுமிகளாக இருந்தபோதே, பெற்றோருடன் மீன் சுத்தம் செய்யும் தொழிலில் ஈடுபட்டவர்கள். இருவரும் 2009 ஆம் ஆண்டு காசிமேடு தருணாலயா என்ற அமைப்பால் மீட்கப்பட்டனர்.
பட்டாசு பேப்பர் சுற்றும் தொழிலில் இருந்து 2010-ஆம் ஆண்டு மீட்கப்பட்ட விருதுநகரைச் சேர்ந்த மாணவி அருள்ரோஜா 435 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆடு மேய்க்கும் தொழிலில் இருந்து 2007-ஆம் ஆண்டில் மீட்கப்பட்ட கோவையைச் சேர்ந்த வி.நவீன் 427 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பிளஸ்-2 முடித்து ஐஏஎஸ் ஆவதே தனது லட்சியமாகக் கொண்டுள்ளார்.
இவர்களைப் போன்று 20-க்கும் அதிகமான மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
80 சதவீதம் பேர் தேர்ச்சி: தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 300-க்கும் அதிகமான, மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மாவட்டத்தில் தேர்வெழுதிய 12 பேரும் தேர்ச்சி பெற்றனர். அதுபோல ஈரோட்டில் தேர்வெழுதிய 27 பேரில் 25 பேரும், கோவையில் 21 பேரில் 20 பேரும், தருமபுரியில் தேர்வெழுதிய 54 பேரில் 49 பேரும், விருதுநகரில் தேர்வெழுதிய 19 பேரில் 18 பேரும், நாமக்கலில் தேர்வெழுதிய 32 பேரில் 28 பேரும், வேலூரில் தேர்வெழுதிய 25 பேரில் 19 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com