ஆளும் தமிழக அரசை தூக்கியெறிய வேண்டும்: சிம்பு ஆவேச வீடியோ பேச்சு

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி,
ஆளும் தமிழக அரசை தூக்கியெறிய வேண்டும்: சிம்பு ஆவேச வீடியோ பேச்சு

தூத்துக்குடியில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸார் தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீச்சு மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் புதன்கிழமை நிலவரப்படி, 2 பெண்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், போலீஸாரின் தடியடியில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தூத்துக்குடி சாயர்புரம் அருகேயுள்ள இருவப்பபுரத்தைச் சேர்ந்த செல்வசேகர் (42) வியாழக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து தூத்துக்குடி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாட்களாக இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து நடிகர் சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 2 நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய அந்த வீடியோவில் கருப்பு உடையணிந்து ஆங்கிலத்திலேயே பேசியுள்ளார்.

அதில் அவர் பேசியிருப்பதாவது: ஸ்டெர்லைட் தொழிற்சாலையை ஒட்டியுள்ள பகுதியில் வாழும் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் போராடிய அப்பாவி மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தமிழகத்தில் என்ன தான் நடக்கிறது? மக்கள் விரும்பி வாக்களித்த தலைவர் இப்போது உயிருடன் இல்லை. அவர் எப்படி இறந்தார் என்றும் இதுவரை தெரியவில்லை.

தூத்துக்குடி விவகாரத்தில் தலைவர்களும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நமக்கு இரங்கல் செய்திகள் தேவையில்லை. இதனால் உயிரிழந்தவர்கள் திரும்பி வந்துவிட போகிறார்களா?, பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவது மேலும் கவலையளிக்கிறது. போராடுவதற்காக மக்கள் கூடும் போது காவல் துறையினர் இப்படிதான் செயல்படுவதா? மாநில அரசு இதுவரை என்ன செய்தது?  இந்த அரசு நிச்சயமாக தூக்கியெறியப்பட வேண்டும்.

இந்த பிரச்னையில் தீர்வு காணவே விரும்புகிறேன். என்னிடம் அதற்கான தீர்வும் இருக்கிறது. அனைவருக்கும் இந்த செய்தி சென்று சேர வேண்டும் என்பதற்காகவே நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். இந்த விவகாரத்தில் அனைவரது கவனமும் திரும்ப வேண்டும். தமிழர்களுடன் மோத வேண்டாம் என அந்த வீடியோவில் பேசியுள்ளார். அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com